Skip to content

பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்

பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் (25.06.1927  – 30.12.2015)

பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்கள் திருவண்ணாமல மாவட்டம் வந்தவாசி வட்டம் அகரகொரக் கோட்டைக் கிராமத்தில் திருமிகு. ஜெயராவ் நைனார்திமதி சுந்தரம்மாள் இணையருக்கு 25.06.1927 அன்று பிறந்தவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் மு.. அவர்களிடம் தமிழ் முதுகலைப் பயின்றவர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள .எம்.ஜெயின் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். உழைப்பையே தன் மூலதனமாகக் கொண்டு வாழ்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாறு, மொழித்திறன், மனோன்மணீயம் நாடகம் உரை, ஐம்பெருங்காப்பியங்களுக்கு உரை, சமண வினைக்கோட்பாட்டை விளக்கும் ஆராய்ச்சி நூல், திருக்குறளுக்கு இவர் எழுதிய விரிவான உரை உட்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பேச்சாற்றல் மிக்க இவர் சமண இலக்கியங்கள் மட்டுமல்லாது எந்தவொரு தமிழ் இலக்கிய நூல் பற்றி மேடையில் பேசும்போது ஒரு குறிப்புக்கூடக் கையில் வைத்துக் கொள்ளாமல் ஒரு மணிநேரம் மேடையில் உரையாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இளம் வயதிலேயே மேடையில் தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்த இவர், தன்னுடைய இறுதிக்காலம் வரை சற்றொப்ப அறுபது ஆண்டுகள் மேடையில் உரையாற்றிய தமிழறிஞர்.

நேர்கோட்டு வாழ்க்கையர், உயர்ந்த பண்பாளர், நல்லறம் பேணும் நல்லறிஞர். தம் வாழ்நாளில் நல்ல நூல்களைப் பதிப்பித்தவர். வர்த்தமானன் பதிப்பகம், நல்லறப் பதிப்பகம் என இரண்டு பதிப்பகங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். இவற்றின்வழி சங்க இலக்கியம், பதினெண்கீழ்க் கணக்கு, காப்பியங்கள், பன்னிரு திருமுறை, நாலாயிரத்திவ்யப் பிரபந்தம், அஷ்டப் பிரபந்தம், வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம், மகாபாரதம், பிரம்மசூத்திரம், தமிழ்ச் சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா ஆறு திருமுறைகள் மற்றும் தனிப்பாடல்கள் என அனைத்திற்கும் அறிஞர் பெருமக்களைக் கொண்டு உரை எழுதி வெளியிட்ட பெருமைக்கு உரியவர்.

தமிழ்நாட்டிலேயே முன்பதிவுத் திட்டத்தின்மூலம் நூல்களை விற்பனை செய்யும் முறையை இவர் உருவாக்கிய வர்த்தமானன் பதிப்பகம் வெற்றிகரமாகச் செய்து வருகிறது. தமிழாகவே வாழ்ந்த பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்கள் அனைவரின் பாராட்டிற்கும் உரிய தமிழ் அறிஞர்.

பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களைப் பற்றி அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் பாராட்டி உரைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை வருமாறு :-

புத்தகப் பதிப்புத்துறையில் மகத்தான புரட்சியைச் செய்துவருவது வர்த்தமானன் பதிப்பகம். வர்த்தமானன் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் எம்.. அவர்கள் பிறவியில் சமணசமயத்தைச் சார்ந்தவர்.

சமண நெறிப்படி வாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கியங்கள்மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு மகத்தானது. சங்க இலக்கியங்கள், பன்னிரு திருமுறைகள், கந்தபுராணம் என்று தமிழ் இலக்கியங்களில் மிகப்பெரும் பகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டு இருக்கும் ஒவ்வொரு நூலும் பல பாகங்கள் கொண்டதாக இருக்கின்றன. நூல்களின் விலையைப் பார்த்தால் பிரமிப்பாகவும் இருக்கிறது. அது அடக்கவிலைக்குச் சற்று அதிகம். அவ்வளவுதான் என்கிறார் திரு. ஸ்ரீசந்திரன். குறைந்த லாபத்தில் நிறைய தமிழ் நூல்களை வெளியிடுவதுதான் அவருடைய நோக்கம்.

தாம் வெளியிடும் நூல்கள் தமிழ் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதற்காகப் பதிப்பகத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். தாங்கள் வெளியிடும் புத்தகங்கள் அச்சில் இருக்கும்போதே முன் வெளியீட்டுத் திட்டம் என்று திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்தத் திட்டம் பதிப்பகத்துறையில் முதலில் செய்திருப்பது வர்த்தமானன் பதிப்பகம்தான்.

இப்போது மற்ற பதிப்பகங்கள் பின்பற்றிவருகின்றன. முன் வெளியீட்டுத் திட்டத்தினால் என்ன பயன்? என்று கேட்கலாம். பன்னிருதிருமுறை 24 பாகங்களைக் கொண்டது. இந்த 24 பாகங்கள் விலை 2000 ரூபாய். முன் வெளியீட்டுத் திட்டப்படி நூலைப் பெற 1200 ரூபாய் செலுத்திப் பதிவு செய்து கொண்டால் போதும். நூல்கள் குறிப்பிட்ட தேதியில் அவர்கள் வீட்டுக்கு வந்துவிடும்.

எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும் தெய்வம் என்று மகாகவி பாரதியார் சொல்லி இருப்பது போலத் தாம் மேற்கொண்ட பணியைத் தெய்வீகப் பணியாகவே செய்து வருகிறார் திரு. ஸ்ரீசந்திரன்.

புத்தகத்தின் அச்சும் புத்தக அமைப்பும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது.

தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் சிறந்த முறையில் பணி ஆற்றிவரும் வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் எம்.. அவர்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு தமிழ்த்துறை மூலமாகச் செய்யவேண்டிய பணிகளை வர்த்தமானன் பதிப்பகம் செய்துவருகிறது என்றால் அது மிகைப்படக் கூறுவது ஆகாது.

தொடர்ந்து வர்த்தமானன் பதிப்பகம் தமிழ்ப்பணி ஆற்றுவதற்குத் தமிழ் மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” (கீதைப் பேருரை, பக். 23 – 25).

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995