தவத்திரு குன்றக்குடி அடிகளார் (11.07.1925 – 15.04.1995)
மயிலாடுதுறை மாவட்டம் திருவாளப்புத்தூருக்கு அருகில் உள்ள நடுத்திட்டு எனும் சிற்றூரில் பிறந்தவர். சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இயற்பெயர் ரங்கநாதன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவர். அப்போது விபுலானந்த அடிகளோடு தொடர்பு ஏற்பட்டது. கடவுளை நம்பு, தமிழைப்படி என அடிக்கடி அவர் வற்புறுத்துவார்.
1944ஆம் ஆண்டு தருமையாதீனத்தில் இணைந்தார். படிப்படியாக உயர்ந்தார். 1949இல் குன்றக்குடி ஆதீனத்தின் இளவரசுப் பட்டத்தில் அமர்ந்தார். பின்னர் மகாசன்னிதானமாக உயர்ந்தார். திருவாசகமும் திருக்குறளும் இவருக்கு இரு கண்கள்.
வாழ்நாள் முழுமையும் திருக்குறளையே மையமாகக் கொண்டு எழுதியும் பேசியும் வந்தவர். 1986ஆம் ஆண்டு தமிழக அரசு அடிகளாருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பித்தது. கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில் என இருபத்திரெண்டு கிராமங்களைப் புரந்து வருகிறார். இந்தியா முழுமைக்கும் குன்றக்குடி கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக உருவாக்கினார். 1972ஆம் ஆண்டு சோவியத்து ஒன்றிய நாட்டுக்குச் சென்றார். அப்பயணத்தின் பயனாக இத்திட்டம் அவர் மனத்தில் தோன்றியது. இதனால் இந்திய ஒன்றிய அரசின் பாராட்டைப் பெற்றார்.
சமயத்தைச் சமுதாயத்திற்கு உரியதாக ஆக்கிய மக்கள் துறவியாகத் திகழ்ந்தவர். அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தல், உழவாரப் பணி, சேரித் தொண்டு, திருவாதவூரில் திருவாசக விழா, பறம்பு மலையில் பாரி விழா, முதல் மாநில அருள்நெறி மாநாடு, அயல்நாடுகள் பயணம் என அனைத்திலும் புரட்சி கண்ட பெருமகன். 08.07.1985இல் அடிகளாரின் பொன்விழா சிறப்பாக நடைபெற்றது. இவரது தலைமையில் பட்டிமன்றத்தில் பேசும் பாக்கியத்தைப் பெற்றேன்.
திருக்கோயில்கள் மக்கள் பயன்பாட்டிற்குரிய சமுதாயக் கூடங்களாக மாற வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்.
சமுதாயத் தொண்டிற்கு முதலிடம் கொடுத்த அருளாளர். சொற்பொழிவாளர், ஏற்றமிகு எழுத்தாளர், பட்டிமன்றப் பெருந்தலைவர், நல்ல நூல்களின் ஆசிரியர், மக்கள் தொண்டர் எனப் பன்முகம் கொண்டவர் அடிகளார். அனைவராலும் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் அடிகளார் என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (45ஆவது பட்டம்) எனப் போற்றப்பெற்றவர்.
மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்; தமிழர்களின் சைவ சமயத் தலைவர்; அருள்நெறித்தந்தை; அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளாருக்கு 1989 ஆம் ஆண்டு மதிப்புறு டாக்டர் பட்டம் (D.Lit.,) வழங்கிச் சிறப்பித்தது.
திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு, மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு), திருவாசகத் தேன் என 25 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். அடிகளாரின் நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்று 16 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.