Skip to content

புலவர் ஜெ.பானுராசனார்

புலவர் ஜெ.பானுராசனார் (7.2.1925-14.5.2004)

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அகரகொரக் கோட்டைக் கிராமத்தில் திருமிகு. ஜெயராவ் நைனார் திருமதி. சுந்தரம்மாள் இணையருக்கு 7-2-1925 அன்று பிறந்தவர்.

புகழ்பெற்ற மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ்வித்துவான் பட்டம் பெற்றவர். வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். பேராசிரியர் ஸ்ரீசந்திரன் அவர்களின் தமையனார். ஒரேகுடும்பத்தில் அண்ணனும் தம்பியும் தமிழறிஞர்களாகப் பொலிவது முன்னோர் செய்த தவப்பயனே ஆகும்.

பெரும்புலவராக மிகச்சிறந்த சொற்பொழிவாளாரகவும் திகழ்ந்த புலவர் ஜெ. பானுராசனாரைப் பற்றி அவருடன் பிறந்த தம்பி பேராசிரியர் ஸ்ரீசந்திரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று அதிகமாகச் சிந்தாமணி பற்றிப் பேசப்படுகிற தென்றால், அதற்கு மூலக்காரணமாக இருந்தவர் ஜெ.பானுராசனார். அவரது சிந்தாமணிச் சொற்பொழிவைக் கேட்காதவர்களே இல்லை. எல்லாப் பாடல்களும் அவருக்கு மனப்பாடம். பாடல்கள் மட்டுமன்று, நச்சினார்க்கினியர் உரையும் அப்படியே! சிறப்பாக இவற்றை எடுத்துத் தெளிவாக, இனிமையாக இவர் விளக்கிய காரணத்தால் சிந்தாமணிச் சுடர் என்ற விருதை இவர் பெற்றார்.

ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் பானுராசனாரை உடன் அழைத்துச் செல்வார். உயிர்ப்பலியைத் தடுக்க அவர் ஆற்றிய சொற்பொழிவைத் தொடர்ந்து இவர் செய்து வந்தார்.

அந்தக் காலத்தில் மணிப்பிரவாள நடையில் உள்ள ஸ்ரீபுராணத்தை இவர் கோயிலில் படிக்கும்போது அனைவரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர். திவ்யத்வனி போன்ற இவரது கம்பீரமான குரல் வளமும், ஸ்ரீபுராண நடையும் கேட்பவரை மெய் மறக்கச் செய்யும். ஸ்ரீபுராணத்தில் எனக்குப் பற்றும் ஆர்வமும் வரப் பெரிதும் துணையாக இருந்தவர் என் அண்ணன் பானுராசனாரே ஆவார். அதுமட்டுமன்று, ஸ்ரீபுராணத்தை நான் தமிழில் எழுதியபோது, எனக்குப் பெரிதும் உதவியாக இருந்து, அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கிவந்தார். தமிழ்நாட்டில் சமணரிடையே தோன்றிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஜெ. பானுராசனாரே ஆவார்.

மேருமந்தர புராணத்திற்குத் தெளிவுரை தந்தவர்!

இப்படி ஒரு தெளிவுரை வந்த பிறகுதான் மேருமந்தர புராணத்தை அனைவரும் படிக்கலாயினர்.

குந்தகுந்தர் கல்வி நிறுவனத்தில் இவர் ஆற்றிய பணியினை அனைவரும் அறிவர். அதுபோலவே திருநறுங்குன்றத் திருப்பணியும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

திவ்யத்வனி போன்ற அந்தக் குரல் வளம் யாருக்கு வரும்?

சிந்தாமணிச் சுடரே. என் நினைவு இருக்கும்வரை அதில் தாங்கள் இருப்பீர். என் நெஞ்சம் திறப்போர் மட்டுமன்று, குடும்பத்தார் அனைவரின் நெஞ்சம் திறப்போரும் நிற்காண்குவர்!” என்கிறார் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன்

வந்தவாசி அருகில் அமைந்துள்ள பொன்னூர் மலை அடிவாரத்தில் இன்று பல்வேறு சமணம் சார்ந்த அமைப்புகள் சமண சமயப் பணிகளை ஆற்றி வருகின்றன. அவற்றிற்கு அடித்தளம் இட்டவர் ஜெ. பானுராசனார் ஆவார்.

சமணத்தமிழ் இலக்கிய வரலாற்றில் புலவர் ஜெ. பானுராசனாரின் சமயப்பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995