பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30.10.1908 – 30.10.1963)
தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் 30-10-1908 அன்று உக்கிரபாண்டித் தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரின் தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டித் தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரின் உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் தேவரவர்கள் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த குழந்தைச்சாமிப் பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமிப் பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்துத் தனிக்கல்விப் பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளிப் படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் நாள் மறைந்தார்.
தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று – நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வோர் ஆண்டும் வடலூர் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு, வள்ளலாரின் ஆன்மீக கருத்துகளை விவரித்துப் பேசி வந்தார்.
தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர், வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம், வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும் முதலான முழக்கங்களை முன்வைத்துப் பொதுவாழ்வை மேற்கொண்டார்.
தேவர் திருமகனாரின் சொற்பொழிவுகள் தொகுக்கப்பெற்று நூலாக வெளிவந்துள்ளது. அவரின் சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பெற்றுள்ளன. இன்றும் அவை குறுந்தகடுகளாகக் கிடைக்கின்றன. அவரது அன்பர்கள் கேட்டு மகிழலாம். மென்மையான ஆற்றொழுக்கான நடை அவருடையது. தங்குதடையின்றி, கையில் எக்குறிப்பும் இல்லாமல் 3 மணிநேரம் பேசும் ஆற்றல்மிகுந்த சொற்பெருக்காளர். இவரது பர்மா விஜயம் காணொலியாக இன்றும் கிடைக்கிறது. மிகச் சிறந்த முருக பக்தராகவும், அருட்பிரகாச வள்ளலாரின் பக்தராகவும் திகழ்ந்தவர். இவரிடம் தெய்வீக ஆற்றல்கள் விளங்கியதால் இவரை தெய்வத் திருமகன் என்று போற்றி வழிபட்டனர். இன்று வழிபட்டு வருகின்றனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவாகள் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் இறையருளில் ஒன்றினார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி சிறப்பு வழிபாடுகள் நடத்தி அமர்ந்த நிலையில் மண்ணடக்கம் செய்யப்பெற்றார்.