பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை (24.06.1907 – 26.05.1989)
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பிறந்தவர். பன்மொழிப் புலவராகப் பொலிந்தவர். தமிழகத்தில் அதிக அளவிலான நூல்கள், கட்டுரைகள் எழுதியவர்களின் பட்டியலில் கவிஞர் சுத்தானந்த பாரதி முதலிடம் என்றால் இரண்டாமிடம் கா.அப்பாதுரையாருக்கு உண்டு. இவருக்கு 40 மொழிகள் தெரியும் என்றும் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பேசவும் எழுதவும் படிக்கவும் இவரால் முடியும் என்பர்.
காசிநாதன் பிள்ளை, முத்துலட்சுமி அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து பி.எட்., பட்டம் பெற்றார். 1930இல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபாரி ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குழுவில் இணைய ஆசிரியர், தமிழக வரலாற்றுப் பதிப்புக் குழு உறுப்பினர் எனப் பல நிலைகளில் தொண்டு செய்தார்.
1937இல் நாச்சியார் என்ற பெண்ணை மணந்தார். அவரது மறைவுக்குப்பின் அலமேலு அம்மையாரை மணந்தார். இவருக்கு மகப்பேறு இல்லை. தங்கை மகனைத் தத்து எடுத்தார். அவரும் மறையவே பெருந்துன்பம் அடைந்தார். இறுதிக்காலத்தில் பார்வை இழந்தார். தனக்கு படித்துக் காட்ட ஓர் உதவி ஆள் வேண்டுமென விரும்பியவருக்கு ஓர் ஆள் கூட உதவிக்கு அமையவில்லை. பன்மொழிப்புலவர், பேரறிஞர் இறுதிக்காலம் துன்பமாய்க் கடந்தது தமிழ்நாட்டின் அவலம்.
உள்ளத்தில் பட்டதை அப்படியே அவ்வப்போது பேசும் இயல்பால் இவரை எந்த இயக்கமும் ஆதரிக்கவில்லை, போற்றவில்லை. 170 நூல்கள் எழுதியதாக அறிய முடிகிறது. பிறமொழியில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்தவர். அதில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூல் முக்கியமானது. 170 நூல்களைப் படைத்த இவரின் முதல் நூல் குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு. இறுதியாக எழுதியது கொங்குத் தமிழ் வரலாறு. இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராக இருந்து கொண்டு இந்தி எதிர்ப்புப் போரில் பேரறிஞர் அண்ணாவோடு இணைந்தார். பெரியாரோடும் திராவிடர் கழகத்தோடும் நெருக்கமாக இருந்து சில கொள்கைகளில் முரண்பட்டார். அதனால் பன்மொழிப் புலவராக விளங்கி 170 நூல்கள் எழுதியவரைத் தமிழகம் உரிய இடத்தில் வைத்துப் போற்றவில்லை.