தவத்திரு அழகரடிகள் (10.04.1904 – 18.02.1981)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 1904 இல் பிறந்தவர். வள்ளலார் மரபில் சுப்பராய பிள்ளை, மாணிக்கம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றினார். இயற்பெயர் பாலசுந்தரம். ஆசிரியர் இட்ட பெயர் இளவழகனார். தீக்கைகளால் அமைந்த பெயர் அழகரடிகள். இவரின் ஆசிரியர் மறைமலை அடிகள்.
தமிழ்மலை மறைமலையிடம் தமிழ் பயின்றதால் இளமையிலே புலமை நலம் வாய்க்கப் பெற்றவர். 19ஆவது வயதில் சிரவனம் சிவப்பிரகாசர் எழுதிய குட்டிக் குறள் நூலின் முதற் குறட்பாவிற்கு 60 பக்கம் விளக்கவுரை எழுதினார். 21ஆவது வயதில் தங்கம்மாளை மணந்தார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கழகப் புலவராக மிளிர்ந்தார். திருக்குறள், திருவாசகம், திருவருட்பா, பெரியபுராணம், சிவஞான சித்தியார், திருக்கோவையார் ஆகிய நூல்களைப் பல ஆண்டுகள் தொடர் பேருரையாற்றினார்.
திருக்கழுக்குன்றத்தில் திருமுறைப்பெருவிழாவினை 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தினார். 12 ஆண்டுகள் பெரியபுராணம் பேருரை ஆற்றினார். திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் ஓராண்டு தவமியற்றினார். வடநாட்டுத் திருத்தலங்கள் சென்று வந்தார். 1949 ஆம் ஆண்டு மாம்பாக்கத்தில் குருகுலம் தொடங்கினார். திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு ஏற்ப 133 ஏக்கரில் குருகுலம் எனும் தவச்சாலை அமைந்தது. பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தமிழ்க் கல்லூரி என வளர்ந்து தமிழும் ஆன்மிகமும் தழைத்தது. விருதுகளும் பரிசுகளும் பணமுடிப்புகளும் அடிகளாரைத் தேடிவந்தன.
ஔவையார் திருவுள்ளம், கலித்தொகை விளக்கம், சங்கநூற் கட்டுரைகள், திருக்குறள் அறம், இராமலிங்க அடிகள் வரலாறும் திருவருட்பா ஆராய்ச்சியும், திருக்குறள் வாழ்க்கை என 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றிய அழகரடிகள், ஞானியார் அடிகளைப் போல பெருநாவலராக விளங்கினார். இத்தமிழ்ப் பெரியார் 18.02.1981 இல் இறைவனடி சேர்ந்தார்.