Skip to content

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் (07.02.1902 – 15.01.1981)

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் நெல்லை மாவட்டம், சங்கர நயினார் கோயிலைச் சார்ந்த பெரும்புதூரில் பிறந்தவர். ஞானமுத்து தேவேந்திரனார்பரிபூரணம் அம்மையாருக்குப் பத்தாவது மகனாகப் பிறந்தவர். வித்துவான், பி..எல்., பட்டங்களைப் பெற்றவர். ஆம்பூர், திருச்சி, சென்னை, சேலம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய அறிஞர்

மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளவர்மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தவர். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் இவரைமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்என்று போற்றினார். 05.05.1971இல் நடைபெற்ற பாரிவிழாவில் குன்றக்குடி அடிகளார் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கி இவரைப் பாராட்டினார். தமிழக அரசு 15.01.1979இல் செந்தமிழ்ச் செல்வர் என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

தமிழ், உலக மொழிகளில் மூத்தது, மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியெனவும் வாதிட்டவர். “கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தமிழ் தன் சொற்கள் பலவற்றை அளித்ததுஎன்று நிறுவியவர். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் எடுத்து இயம்பியவர்.

இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி வரலாறு, மொழி ஒப்பியல், இலக்கிய வரலாறு, தமிழக வரலாறு எனப் பல்துறை நூல்களை இயற்றியவர். முதல் தாய்மொழி, திராவிடத்தாய், பழந்தமிழ் ஆட்சி, வேர்ச்சொல் கட்டுரைகள், உயர்தரக் கட்டுரை இலக்கணம், வடமொழி வரலாறு, தமிழ் வரலாறு, பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழர் மதம் என 35க்கும் மேலான நூல்களையும் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். இவர் 1967 இல் எழுதியதமிழ் வரலாறுஎனும் நூல் குறிப்பிடத்தக்கதாகும். இவர் எழுதிய தமிழர் மதம் (1972) என்ற நூலில் கடவுள் இருப்பதற்கான சான்றுகளைப் பலவாறு விரித்துக்காட்டுகிறார்.

இவர் எழுதிய 812 பக்கங்கள் கொண்ட திருக்குறள் தமிழ் மரபுரை (1969) தனித்தமிழ் மரபைச் சார்ந்தது. திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும், திருவள்ளுவர் காலம், வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம், வள்ளுவன் என்னும் பெயர், 501ஆம் குறள் விளக்கம், திருவள்ளுவரும் பிராமணீயமும்மதிப்புரை முதலான இவரது கட்டுரைகள் திருக்குறள் தொடர்பானவை.

இந்நூலாசிரியர் தமிழ் மொழியைப் போற்றிப் புகழும் இயல்பு எண்ணியெண்ணி மகிழத்தக்கது. நூலாசிரியர் தன்னுடைய மொழிப் புலமையால், தமிழ்மொழி வரலாற்றினைப் புதிய பார்வையுடன் எழுதியுள்ளார்.

உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை; வளமை; தாய்மை; தூய்மை; செம்மை; மும்மை; இனிமை; தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது தமிழ் மொழியே எனும் கருத்துடையவர் இவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995