பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (08.01.1901 – 27.08.1980)
பல்கலைச் செல்வர் பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் சென்னையிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். பிரிட்டனில் லெம்னிக் கண்காட்சியில் தம் பாவலர் பாய்ஸ் கம்பெனியைக் கொண்டு பல நாடகங்களை நடத்திக் காட்டிய தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் இவர் தமையனார் ஆவார்.
பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றவர். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டவர். இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் அப்பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறை உருவாக்கிய அறிஞராகவும் சென்னை மாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகவும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். இந்திய ஆழ்நிலை தியானக்குழுவின் தலைவராக இருந்தவர். அதன் பயனாக ‘வாழும் கலை : தேனிப்பு’ என்ற நூல் மலர்ந்தது. மொழியியலின் தந்தையாக விளங்கியவர். தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்கள் இவரின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று. இவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் அனைவரும் இவரைப் போற்றிக் கொண்டாடி இருக்கின்றனர். வாழுங் காலத்திலேயே சமகால அறிஞர்களால் போற்றப் பெற்ற தமிழறிஞராக விளங்கினார். பன்மொழிப் புலவராக விளங்கியவர். கலைமாமணி, தாமரைத்திரு முதலான விருதுகளைப் பெற்றவர்.
வள்ளுவரும் மகளிரும், அன்புமுடி, பிறந்தது எப்படியோ, தமிழா நினைத்துப் பார், நீங்களும் சுவையுங்கள், வள்ளுவர் கண்ட நாடும் காமமும், நற்றிணை நாடகங்கள், கானல்வரி, குடிமக்கள் காப்பியம், சமணத்தமிழ் இலக்கிய வரலாறு, பாட்டிலே புரட்சி, சயாமில் திருப்பாவை திருவெம்பாவை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய ‘தமிழ் மொழி வரலாறு’ மற்றும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் இரண்டு நூல்களும் குறிப்பிடத்தக்கன.
தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய இரு நூல்களையும் பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் ஆங்கிலத்தில் எழுதினார். தமிழ் மொழி வரலாறு எனும் நூலை டாக்டர் ச.செயப்பிரகாசம் அவர்களும் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலை மு.இளமாறன் அவர்களும் தமிழாக்கம் செய்துள்ளனர்.