Skip to content

சாமி சிதம்பரனார்

சாமி சிதம்பரனார் (01.12.1900 – 17.01.1961)

மயிலாடுதுறை மாவட்டம், கடகம் என்னும் ஊரில் பிறந்தார். சாமிநாத மலையமான், கமலாம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையிடம் தமிழ் கற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்று பண்டிதர் பட்டம் பெற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும் தஞ்சை மாவட்டப் பள்ளியிலும் பணியாற்றினார். தமது 40 ஆவது வயதில் பணியிலிருந்து விலகிப் பொதுப்பணிகளில் ஈடுபட்டார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதைத் திராவிடர் கழகம், காங்கிரஸ் பொதுவுடைமைக் கட்சிகளிலேயே இருந்தவர். இறுதியில் எதிலும் சேராது தமிழிலக்கியப் பணியிலே ஈடுபட்டவர்.

தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு, சிலம்பு, மேகலை, கம்பன், புகழேந்தி, நாயன்மார், ஆழ்வார், அருணகிரி, பட்டினத்தார், வள்ளலார், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், வேதநாயகர் தத்துவம் என அனைத்துத் தமிழ் நூல்களையும் தமிழ்ப்பெரியோர்களையும் எளிமையாக மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். திராவிட இயக்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார்.

தந்தை பெரியார் வரலாற்றைத்தமிழர் தலைவர்என 1939 இல் எழுதி வெளியிட்டார். பெரியாரைப் பற்றிய அருமையான வரலாற்று நூல் இது. பெரியார் முதன்முதலில் (1929 – 1930) மலேசியா சென்றபோது உடன் சென்ற தமிழறிஞர் இவர்.

இவர் காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்களில் இவர் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கும். 13 புனைப்பெயர்களில் எழுதிக்கொண்டே இருந்தார். பல்வகையில் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய பெருமகன். இவர் சேகரித்து வைத்த நூல்கள் முழுமையும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப் பெற்றது. 27 நூல்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை இதழ்களில் எழுதியுள்ளார். இவரது நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் என்ற பெயரில் 22 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இவரது நூல்கள் 2000 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப் பெற்றன.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995