வ.உ.சிதம்பரனார் (05.09.1872 – 18.11.1936)
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார். சட்டம் படித்துத் திறமான வழக்கறிஞராகப் பணியாற்றி பட்டம் பதவி துறந்து நாட்டுப்பணியில் ஈடுபட்டார். சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். கப்பல் ஓட்டிய தமிழரானார். சுதந்திரத்திற்காகச் சிறை சென்றார். செக்கிழுத்தார். விடுதலை போரில் ஈடுபட்டிருந்த போதிலும் தமிழ்த் தொண்டாற்றினார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். மகாகவி பாரதியார் அவர்கள் மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். இறக்கும் தருவாயிலும் பாரதியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இறந்தார் என்பர்.
தொல்காப்பியம் இளம்பூரணர் உரை, திருக்குறள் மணக்குடவர் உரை ஆகிய இரண்டையும் ஆராய்ந்து பதிப்பித்தார். ஜேம்ஸ் ஆலன் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களை மனம்போல வாழ்வு (1909), அகமே புறம் (1914) வலிமைக்கு மார்க்கம் (1916) என மொழி பெயர்த்தார். மெய்யறிவு (1915), மெய்யறம் (1914) என நூல்கள் எழுதினார். வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள் எனும் பொருளில் யான் ஆற்றிய சொற்பொழிவு (இலக்கியச் சிந்தனை அறக்கட்டளை) நூலாக வானதி பதிப்பகத்தாரால் (2006 & 2010) வெளியிடப் பெற்றுள்ளது.
இவர் கோவை சிறையில் இருந்தபோது தம் சுயசரிதை வரலாற்றை அகவலில் கவிதையாகப் படைத்தார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை (1917) நூலினைப் பதிப்பித்தார். இவர் எழுதியதும் பதிப்பித்ததுமான நூல்கள் 15 ஆகும். தமிழ் மொழிக்காகவும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல் தான் வ.உ.சிதம்பரனார்.