திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921)
தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்தில் உள்ள திருமணம் என்னும் ஊரில் பிறந்தவர். கேசவ சுப்புராய முதலியார், பாக்கியம் அம்மையார் இணையருக்கு மகனாகத் தோன்றினார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று அக்கல்லூரிலேயே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் புலமை மிகுந்தவர்.
தமிழ் வியாசங்கள், வியாச மஞ்சரி, திருவள்ளுவர், கம்பர், கண்ணகி கதை, அக்பர், அபிநவக் கதைகள், ராபின்சன், குருசோ, மாதவ கோவர்த ரானடே, பஞ்சலட்சணம், கலிங்கத்துப் பரணி உரைநடை ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர் பதிப்பித்த நூல்கள் அறநெறிச் சாரம், ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, குசேலபாக்கியானம், அரிச்சந்திர புராணம் ஆகியவை. இவர் தமிழ்க் கடலாக வாழ்ந்தவர்.
சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 14 உரைநடை நூல்களையும் 6 பண்டைய இலக்கியங்களையும் பதிப்பித்திருக்கிறார்.
இவரது ஆங்கிலப் புலமைக்காகவும் இவர் எழுதிய உரைநடை நூல்களுக்காகவும் இவர் வாழ்ந்த காலத்திலேயே இவர் பாராட்டப் பெற்றுள்ளார். உரைநடை ஆசிரியர், உரையாசிரியர், ஆராய்ச்சியாளர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாசிரியர், வரலாற்று அறிஞர், இலக்கண அறிஞர் எனப் பன்முகம் கொண்டவர்.
கைப்பொருளை இழந்து நூல்களைப் பதிப்பிப்பது எவ்வளவு பெரிய துன்பம் என்பதைத் தமது பதிப்புரையில் (1893) குறிப்பிட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தவர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். மேலும் தவலுக்கு முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதியுள்ள செல்வக் கேசவராய முதலியாரின் செய்யுளும் வசனமும் நூலினைக் (மார்ச்சு 2022) காண்க.