தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் (19.02.1855 – 28.04.1942)
தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சங்க இலக்கியம் பதினெட்டில் பதினான்கை முதன் முதலில் பதிப்பித்த பெருமைக்குரியவர். காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள் என அவர் பதிப்பித்தவை ஏராளம். தமிழகம் முழுமையும் பனையோலைகளைத் தேடித் தேடிச் சென்றவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் அன்பிற்குரிய மாணவர்.
இவரில்லையேல் பக்தி இலக்கியத்திற்கு முன்னைய பேரிலக்கியங்கள் இல்லை. எனவேதான் தமிழ் என்றதும் இவர் நினைவே முதலில் எழுகிறது. இவரே முதலில் தோன்றுகிறார். அதற்கு முன் திருக்குறளைத் தாண்டி பெருநூல்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா? இவர் தோன்றவில்லையேல் பதினெட்டாம் பெருக்குப் புனலிலும் கனலிலும் கரையானாலும் அன்றோ நம் பழந்தமிழ்ச் செல்வங்கள் அழிந்து போயிருக்கும். அழியாது காத்த அண்ணல், தமிழ் காத்த தெய்வம், வண்டமிழ் இலக்கியம் வழங்கிய வள்ளல்.
பொதியமலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே
என மகாகவி பாரதியார் இவரைப் போற்றிப் பாடுகிறார்.
பார்காத்தார் ஆயிரம்பேர்; பசித்தார்க்காகப்
பயிர் காத்தார் ஆயிரம் பேர்; பாலர்க் காக
மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
மனங்காத்த தமிழ்த்தாய் “என்உடைமை யெல்லாம்
யார்காத்தார்” எனக்கேட்க ஒருவன் அம்மா
யான்காப்பேன் எனவெழுந்தான் சாமிநாதன்!
நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான்
நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான்
என வ.சுப.மாணிக்கனார் உ.வே.சா. அவர்களைப் போற்றுகிறார்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்தது 87 ஆண்டுகள். அச்சில் பதிப்பித்த மொத்த நூல்கள் 87. இவரது அரும்பணிகளைப் பாராட்டி ஒன்றிய அரசு மகோபாத்தியாய (01.01.1906) என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டியது. சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் (21.03.1932) சிறப்பித்தது. தமிழக அரசு இவர் பணியாற்றிய மாநிலக்கல்லூரி வளாகத்தில் இவருக்குச் சிலை வைத்துப் போற்றியது. இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ‘என் சரித்திரம்’ எனும் பெயரில் எழுதியுள்ளார். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூலாக இந்நூல் திகழ்கிறது. இவர் தம்முடைய ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.