Skip to content

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் எழுந்த பின்புலம்

உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும். “இளமையில் கல்வி பசுமரத்தாணி” என்பது பழமொழி.

திருக்குறள் மனித இனத்தின், குறிப்பாக தமிழர்களின் மாபெரும் பொதுவுடைமைச் சொத்து. திருக்குறள் நெறிகள் பரவப்பரவ , அறம் பரவும். தமிழ் மொழிப்பயிற்சியும், மாணவர்களுக்குக் கிடைக்கும். அறமும், மொழியும் வளரும். மேலும் அறமும், திறனும், ஒருங்கே வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிட வலுவான அடித்தளமாக திருக்குறள் மனனம் அமையும். சமுதாயத்தில் நல்லிணக்கமும், மனித நேயமும் வளரும்.

திருக்குறள் பொருள் பொதிந்த, பொருள் நிறைந்த, இகலில்லா இன்ப வாழ்க்கையின் கையேடு.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கி வருகிறது. திருக்குறள் முற்றோதல் செய்யும் 70 மாணவர்களுக்கு, 2021 ஆம் வருடம் வரை, தலா ரூ10000/- திருவள்ளுவர் தினத்தன்று அரசு வழங்கி வந்தது.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பை நீக்கியது.பரிசுத்தொகையும் உயர்த்தப்படும் என்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.{தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை. தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை – 46 அறிவிப்புகள் ( 2021-2022)}

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை ஆண்டுதோறும் பரிசு பெறும் மாணவர்களின் வயதைப் பார்த்தால் 95 விழுக்காடு மாணவ/ மாணவியர் 14 வயதுக்குட்பட்டே இருக்கிறார்கள். ஆறு / ஏழாம் வகுப்புக்குள் மனனம் செய்துவிட்டால், பிறகு மேல் வகுப்புகளில் பொருளுணர்ந்து படிக்க ஏதுவாக இருக்கும். தனிவாழ்வில் நிறைவான வாழ்க்கை வாழவும், சமுதாய பிரச்சனைகளை திருக்குறள் துணையுடன் எதிர் கொள்ளவும், இளவயதிலேயே 1330 அருங்குறள் மனனம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பின்புலத்தில், வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் இணைந்து, ஏற்கனவே திருக்குறள் முற்றோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களையும், தன்னார்வ ஆசிரியர்களையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா திருக்குறள் முற்றோதல் பயிற்சியைத் துவங்கியது.

சி.இராஜேந்திரன்