சிந்தனை செய் மனமே
அறிதோறு அறியாமை கண்டற்றால்…
இந்தத் தொடர் காமத்துப்பாலில் குறள் 1110 இல் வருகிறது..
இது ஒரு மிகவும் ஆழமான, உளவியல் சார்ந்த தொடர்.
உவமையைக் கூற வரும்போது ஒரு உவமையை எடுத்துக்கொண்டு, ஒரு உண்மையை விளக்கிக் கூறுவார் வள்ளுவர்
வேறு சில குறள்களில் ஒரு உண்மையை வைத்து, வேறு ஒரு உண்மையை விளக்குவார். அதாவது உவமானம் , உவமேயம் இரண்டிலும் அறக் கருத்தே ஆளப்படும்.
இந்த குறளில் இரண்டாம் வகை உத்தியை வள்ளுவர் பயன்படுத்துகிறார்
எடுத்துக் கொண்ட உவமானம் பொருட்பாலைச் சார்ந்தது
உவமேயம் காமத்துப்பாலைச் சார்ந்தது
காமத்துப்பாலை விளக்க வரும்போது, தலைவனின் உள்ளத்து உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் போது, மிகவும் பொறுப்புடன் இருந்து அறிவு சார்ந்த ஒரு உவமையை வள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார்.
இது தலைமகன் கூற்றாக வருகிறது. காமத்துப்பாலின் நுட்பமும் செறிவும் விளக்க இந்த ஒரு உவமை போதும். 🙏🏼😊
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: ( நன்றி குறள்திறன். காம் )
மணக்குடவர் : யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும்;
பரிப்பெருமாள் : யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும்;
பரிதியார் : நூல்களாலும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய அறிய முன் அறியாமை கண்டாற் போலக் காணப்படாநின்றது;
காலிங்கர் : நெஞ்சே! யாம் பலவகைப்பட்ட நூல்களையும் கற்று அவற்றின் கருத்து அறியுந்தோறும் அறியுந்தோறும் மற்றது ஒழிந்த நன்னூலும் அவ்வாறு கற்று இனிது அறியப்பெறாமை யாகிய விரும்புதலை நெஞ்சில் கண்டு செல்கின்ற அதுவே போலும்;
பரிமேலழகர் : (புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது;
‘ஒன்றை அறியுந்தோறும் முன் அறியாமை கண்டாற் போல’ என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
………………
அறியும் தோறும் அறியப்படுவது அறிவல்ல.. நமது அறியாமையே அறியப் படுகிறது. இதுவே, அறிவை வளர்த்துக் கொள்ள வழி..
இதற்கு மாறாக, அறியும் தோறும் அறியப்படுவது புதிய அறிவு, என்று மனத்தில் நினைத்தால், அறிவு வளர்வதற்குப் பதிலாக ஆணவம் மேலோங்கி நிற்கும். கற்பது குறையும்.
அதனால் தான் உளவியல் பேராசான் வள்ளுவர் தனது 2 வது குறளிலேயே கல்வியின் பயனை, “கற்றதன் பயன் வாலறிவன் தாள் தொழுதல் ” எனத்தெளிவுபட உரைத்தார் .
Valluvar Forever
இவர்போல் யார் இன்னொருவர்
www.voiceofvalluvar.org
15/09/2022