Skip to content

திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

முனைவர் சொ. சேதுபதி

“மெய்ப்பாடு என்பது சொல்ல வந்ததை, அப்படியே கண்ணால் கண்டது போல், காதால் கேட்டது போல், உருவாக்கிக் கண்முன்னால் நிறுத்துவது /படைப்பது” . தமிழண்ணல்

“மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே, புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்”…. பேராசிரியர்

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் 27 நூற்பாக்களை உள்ளடக்கியது. அவற்றுள் முதல் 12 நூற்பாக்களிலும், இறுதி ஒரு நூற்பாவிலும் உணர்த்தப்படுவது அகத்திற்கும் புறத்திற்குமான பொது மெய்ப்பாடுகள். இடையில் இடம்பெறும் 14 நூற்பாக்கள் அகத்திணைக்குரியது.

மெய்ப்பாடுகள்
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப
(தொல், மெய்3)

இந்த எட்டு மெய்ப்பாடுகளும் மேலும் நன்கு நான்காகப் பிரிந்து 32 மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளன

அந்த மெய்ப்பாடுகளை எவ்வாறு திருவள்ளுவர் தனது நூலில் காட்சிப்படுத்துகிறார், என்று நூற்றுக்கும் மேற்பட்ட குறட்பாக்களை மேற்கோள்களாகக் காட்டி, 40 நூல்களின் துணைக் கொண்டு, இந்த நூலாசிரியர் ஓர் அரிய நூலைப் படைத்திருக்கிறார்.

எட்டு மெய்ப்பாடுகள் பற்றி எட்டு விரிவான கட்டுரைகள் உள்ளன. இதுதவிர கீழே வரும் 32 மெய்ப்பாடுகள் குறித்தும் ஒரு கட்டுரை உள்ளது

உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக்
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை
கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக்
கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ
அவையும் உளவே அவையலங் கடையே.( தொல் 1206)

நூலின் உள்ளடக்கம்

1.திருக்குறளும் தொல்காப்பியமும் .
2.தொல்காப்பிய மெய்ப்பாடு –
உரைகளின் ஊடேஒரு பயணம் ..
3.திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள் .
4. குறுநகை புரியும் குறளாசான் .
5. அழுகையைச் சிரிப்பாக்கும் அதிசயச்சித்தர் .
6.வள்ளுவருக்கு வந்த வருத்தம்
7. அதிசய அறிஞர் .
8.திருவள்ளுவரை அச்சுறுத்திய தீவினை
9. பெருமிதம் உடைய பேராளர் .
10.குணக்குன்றின் வெகுளி
11.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் வள்ளுவத்தாய் .
12.இன்னும் சில மெய்ப்பாடுகள் .
13.துணை நின்ற நூல்கள் .45 நூல்களின் பட்டியல் உள்ளது

இந்த நூலை வாங்கிப் படிக்கத் தவறாதீர்கள்..
180 பக்கங்கள்.. ரூபாய் 215 /-

அருமையான ஆழமான, ஆய்வு நூல்..
எண்பொருளவாகச் செலச் சொல்லி இருக்கிறார் .. .. நூலாசிரியருக்கு நன்றி, வாழ்த்துகள்.