
- This event has passed.
உலக மொழிகளில் திருக்குறள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
March 26 @ 10:00 am - March 27 @ 3:00 pm

பெரியார் பல்கலைக்கழகம்
சேலம்.
(தேசியத் தர மதிப்பீட்டுக்குழுலின் மறுமதிப்பீட்டில் A++ தரச்சான்றிதழ் பெற்றது மாநிலப் பல்கலைக்கழகம் – NIRF தரம் 56, மாநிலப் பல்கலைக்கழகத் தரம் – 25 சேலம் – 636 011)
தமிழ்த்துறை
உலக மொழிகளில் திருக்குறள்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
நாள்: மார்ச் 26,27- 2025 நேரம் : காலை 10.00 மணி
நிகழிடம் ஆட்சிப்பேரவைக் கூடம்
26/03/25
மதியம் 2.00 மணி
திரு சி.இராஜேந்திரன் IRS அவர்கள் மேனாள் தலைமை ஆணையர், சுங்கம், நடுவண் கலால் & சேவை வரி, சென்னை.
தலைப்பு: உலக மொழிகளில் திருக்குறள்
பெரியார் பல்கலைக்கழகம்,
பேருவகைக் கலைக்கழகம்!
பெருமைக்குரிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களுக்கு வணக்கத்தையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்பு சேர் சொந்தங்கள் பல்லோர் பங்குபெறும், ‘உலக மொழிகளில் திருக்குறள்’ என்னும் தலைப்பில் சிறந்த பன்னாட்டு கருத்தரங்கத்தை மிக எழுச்சியுடன் நடத்த முனைந்திருக்கும் ‘பெரியார் பல்கலைக்கழகம், பல்லாண்டு வாழ்க!’ என வாழ்த்தி மகிழ்கின்றேன்.
சேலம்! நம்முடைய நகரம்! எஃகு இரும்புக்கு பெயர் பெற்றது. மென்மையும் உறுதியும் சரிபாதியாக இணைந்து, தேவையான இடத்தில் வளைந்தும் தேவைக்குத் தக்க உறுதியைக் கொடுத்தும் காணப்படுவது தான், எஃகு இரும்பு.
அதுபோல நாட்டின்கண் வாழ்ந்து வரும் மாந்தர்களினுடைய அறியாமை இருளைப் போக்கியத் ‘தந்தை பெரியார்’ பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம், பெரியாரைப் போன்றே எடுத்த செயல்களிலும், கொடுத்த சொற்களிலும் உறுதித் தன்மையை, தேவைக்கொப்ப வளைந்து கொடுத்து செல்லும் பாங்கினைப் பெற்றுள்ளது.
நம்முடைய பெரியார் பல்கலைக்கழகம் இன்றைக்கு உலக அளவில் திருக்குறள் என்னும் செறிவு மிக்க அறநூல்தனை, தற்போது கைகளில் எடுத்திருக்கக் காண்கின்றோம். செந்தமிழ் நாட்டின் திருக்குறள், உலகப் புகழ் பெற்று விளங்குவதை நாம் அறிவோம்.
திருக்குறள் ஏன் புகழ் பெற்றுள்ளது என்பதை அறிய முயலுங்கால், மாந்தரின் வாழ்வியல் சார்ந்த ஒரு நூலாக, நம்மை வழி நடத்தும் சிறந்த நூலாக இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எப்பொழுதுமே மாந்தர்களுக்கு நன்மையை வழங்கக்கூடிய செய்திகள் நிலைத்து நிற்கும்; புகழ் பெற்றிருக்கும்.
மாந்தர்களுடைய வாழ்வியல் என்பது ஒரு தொடர்கதை! இந்த தொடர் கதையானது, பல்வேறு பிறவிகளை எடுத்து இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கக் காணலாம். நந் தலைமுறையினர் மாந்தனின் தொடர்ச்சி நிலையினர் ஆவர். இன்று பிறந்த குழந்தை அல்லது நாளை பிறக்கப் போகும் குழந்தை உட்பட அனைவருமே தொடர்ச்சிகளின் நீட்சியாளர்கள் தாம்!
நம்முடைய வாழ்க்கை செம்மைப்பட்டு விளங்க வேண்டும் என்று சொன்னால், முன்னோர்கள் அறிந்து, புரிந்து, வழங்கிச் சென்ற பாதையில் நல்லன எது, அல்லன எது எனப் புரிந்து கொண்டு நடைபயில வேண்டும். அப்பொழுது தான் நாம் முழுமையான வெற்றியைப் பெற முடியும்.
அப்படி எண்ணுங்கால் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மாந்தர்கள், இங்கே நாம் கூட்டம் கூட்டம் என்று சொல்வதை ‘நாடுகள்’ என்று வைத்துக் கொள்ளலாம். உலக அளவில் இருக்கக்கூடிய மாறுபட்டத் தட்பவெட்பச் சூழலைப் போன்றே, மாந்தர்தம் மொழிகளின் வகைகளும் மாறுபட்டு காணப்படுகிறன. நாம் ஒன்றை ஒருவருக்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், அஃது அவரவர்களின் தாய் மொழிக்கு ஏற்ப, இருக்க வேண்டும் அல்லது உரைக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய்து, அவர்கள் மொழியில் நாம் ஒரு செய்தியை சொல்லுங்கால், எளிதில் பற்றிக் கொள்வார்கள்.
அத்தகைய நிலைப்பாட்டிலே, நம்முடைய அற நூலான திருக்குறள், இன்றைக்கு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய மாந்தர்களுக்கு, உண்மையான நன்னெறியைக் காட்டும் நூலாக அமைய பெற்றுள்ளது. திருக்குறள், அனைத்து மாந்தர்களுக்கும் சென்று சேர வேண்டும். இதிலே மாற்றுக் கருத்து இல்லை. உலக அமைதி ஒன்றுபட்டு காணப்பட வேண்டும் என்று சொன்னால், அதற்கு மாந்தர்களினுடைய ஒழுக்கம், சரியாக அமைந்திடுதல் வேண்டும் அல்லது அவர்களுடைய வாழ்க்கை முறை அமைதியாகக் காணப்பட வேண்டும்.
அப்படி இருந்தால் தான் உலக அளவில் ஒட்டுமொத்த அமைதியும் – பசுமையும் தழைத்தோங்கும். இயற்கையோடு நாமும் இணைந்து வாழ, கற்றுக் கொள்ள முடியும். இயற்கை, எப்பொழுதுமே நேர்மறையான உணர்வுகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்மறை செயல்களுக்கு உலகம் இடம் கொடுக்காது. அப்படிப்பட்ட நேர்மறை உணர்வுகள் – அதன் செயல்கள் என்பனவெல்லாம் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், எப்படி வாழக்கூடாது என்பதையும் நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது எப்படித் தான் வாழ்வது என்பதையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இன்றைக்கு திருக்குறள் இந்த இரண்டையுமே நமக்கு எடுத்துச் சொல்கிறது. அதனால் தான் மாந்தர்களுக்கு உரிய ‘அற நூலா’க நம்முடைய திருக்குறள் விளங்கிக் கொண்டிருக்கிறது.
‘உலக மொழிகளில் திருக்குறள்!’ என்பது மிகச் சிறந்த ஒரு முடிவு! கல்லில் எழுத்து போல அமையக்கூடிய வரலாற்றுப் பதிவு! மொழி மாற்றம் செய்யப்பட்டத் திருக்குறள், வாழுகின்ற மாந்தர்களின் நெஞ்சங்களிலே பதிந்து, அதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளில் நன்னிலைப் பெற்று சிறப்பாக நடக்கிறது.
அதற்கு மூல காரணமாக அமைந்துள்ள மொழி, தமிழ் மொழி! அதற்கு முழுமுதற் காரணமாக அமைந்துள்ளவர்கள் தமிழர்கள்! அந்த தமிழர்களைத் தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய நாடு, தமிழ்நாடு! போற்றுதலுக்குரிய நன்னாடு!
இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சேலம் மாநகரில் பெரியார் பல்கலைக்கழகம், ‘உலக மொழிகளில் திருக்குறள்!’ என்னும் பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்துவதன் மூலம், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே, ஒரு சிறந்த முன்னெடுப்பை எடுத்துக்காட்டி உள்ளது.
‘அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு’
என உலகினை முன்னிலைப்படுத்தியத் திருக்குறளுக்கு பெரியார் பல்கலைக்கழகம், ஒரு சிறந்த தொடக்கத்தை, மீண்டும் ஏற்படுத்தி தந்திருக்கிறது என்றே நாம் சொல்லலாம்.
இந்த பன்னாட்டு கருத்தரங்கத்தில், அழைப்பிதழில் உள்ள பங்கேற்பாளர்களின் பெயர்களை எல்லாம் கவனித்தேன். மூன்று பெரும் அறிஞர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் முனைவர்களே! தாம் எடுத்த பணிகளில் சிறப்பாக செயல்பட்டு அதற்கானத் தனி தகுதியைப் பெற்றிருப்பவர்கள் ஆய்வாளர்கள்! அவர்களிடையே, மலேசிய எழுத்தாளர் திரு பெ. இராசேந்திரன் அவர்களும், நம்முடைய வள்ளுவர் குரல் குடும்பத் தலைவர் ஐயா திரு சி.இராசேந்திரன் அவர்களும், மிகப்பெரிய எழுத்தாளரான – வங்கி அலுவலர் திரு சோம வீரப்பன் அவர்களும், இங்கே ஒரு அறம் – பொருள் – இன்பமாகக் காணப்படுகிறார்கள். வியப்பு மேலிடுகிறது. இவர்கள் மூவரும் பட்டறிவாளர்கள்; ஆய்வாளர்கள்! பேராளர்கள்! கருத்து ஓவியங்களை, வரைந்து வழங்க வல்லமையுடன் காத்திருக்கிறார்கள். இவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள்.
யாரெல்லாம் செவிமடுக்க ஆயத்தமாக இருக்கின்றார்களோ, மாணவர்களாகக் கூர்ந்து கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய திறனாளர்களாக மாறுவார்கள்! நாமும் கூர்ந்து கேட்போம்! உயர்ந்து நிற்போம்!
இங்கே மிகச் சிறந்த கருத்தரங்கத்தை முன்னின்று நடத்தும் துணைவேந்தர் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் மற்ற பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் நன்றி! பொதுநலம் சார்ந்த மாந்தர்களுக்கும் என்னுடைய வணக்கத்தையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கான முன் முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.
‘நாட்டு நலமே, மாந்தர்தம் நலமாகும்! மாந்தர்தம் நலமே, நாட்டு நலமாகும்! இவ்விரண்டு நலங்களும் சேர்ந்தது தான் இலக்கிய நலமாகும்.’ பறைசாற்றுவோம் நாம், ‘வெற்றி நமதே!’ வாழ்த்துகள்!