பத்து – பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர்ஒருமுறை தாடிக்கொம்பு என்ற ஊருக்கு சென்றிருந்தேன் .திண்டுக்கல் அருகே இந்த ஊர் அமைந்துள்ளது.இந்த ஊரில் உள்ள பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது .
அந்த கோவிலில் தாயார் சன்னிதியில் மிகவும் இளம் வயது பட்டர் ஒருவர் இருந்தார் .அந்த பட்டர் மிக அருமையாக ஆழ்வார் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருந்தார் .கண்களை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தால் போதும் ,நம் மனம் தானகவே அமைதி அடைவதை உணரலாம்.
பாசுரங்கள் மிக எளிமையானவை .நமக்கு பொருள் நன்றாகப் புரியும் . என் கண்களில் நீர் வழிந்து ஓடியது அவ்வளவு அருமையான குரல் … பக்தி ரசம் சொட்டும் ஆழமான பாடல்கள் …
இந்த அனுபவத்தை மனதில் கொண்டு நான் திருவாதவூர் சென்ற போது சிவன் கோவில் குருக்களிடம் திருவாசகப் பாடல் ஒன்றை பாடுமாறு கூறினேன்.
அது மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம். அவர் பிறந்த ஊரில் மிகவும் பழமையான சிவன் கோவில் உள்ளது.
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள்.
அந்த ஊர் சிவன் கோவிலில் உள்ள குருக்களை திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை பாடுங்கள் என்று நான் கேட்டேன் ….அவர் கூறிவிட்டார் , நாங்கள் பாட மாட்டோம் ….ஓதுவார் மூர்த்திகள் தான் பாடுவார்கள் என்றார்கள்… அப்போது ஓதுவார் மூர்த்தி கோவிலில் இல்லை .ஓதுவார் மூர்த்திகள் பாடும்போது கருவறைக்கு வெளியே நின்று தான் பாடுவார்கள் .
பல சிவன் கோவில்களில் மிக அருமையாக பாடக்கூடிய ஓதுவார் மூர்த்திகள் உள்ளனர் ., ஆனால் அவர் கருவறைஉள்ளே சென்று சிவனுக்கு அர்ச்சனை செய்ய முடியாது .
ஆனால் அதே சமயம் திருவாசகம் பாடி பூஜை செய்யாத குருக்கள் கருவறைக்கு உள்ளே இருந்து சிவனுக்கு பூஜை செய்வார் …,என்ன இது முறையா…என்று நான் மனதில் எண்ணிக் கொண்டேன்.
தென்காசி சிவன் கோவிலுக்கு நான் சென்றிருந்த போது அங்கிருந்த ஓதுவார் மூர்த்திகள் மிக அருமையாக பாடிக்கொண்டிருந்தார் ..பூஜை நடந்து கொண்டிருந்தது .அந்த ஓதுவார் மூர்த்திகள் பாடுவதைக் கேட்டதும் ,அவருக்கு ஏதாவது ஒரு சிறு சன்மானம் கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது .ஆனால் அவர் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார் ..ஒரு சிறு இடைவெளி விட்டவுடன் நான் அவரிடம் சென்று ஒரு சிறு தொகையை கொடுத்தேன் .அவர் வாங்க மறுத்துவிட்டார் .அதை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடுங்கள் என்று கூறிவிட்டார். என்னே அவரது பக்தி. அந்த ஓதுவார் மூர்த்திகள் என் மனதில் மிக உயர்ந்து நின்றார்.. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.( குறள்-363) என்ற குறள் என் மனத்தில் ஓடியது…
-ஒரு நிமிடம் மிகச் சிறியவனாக என்னை நான்உணர்ந்தேன் . சி இரா