மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் இலக்கிய ஆர்வலரும்vதிருக்குறளில் ஆழங்கால் பட்டவரும் ஆவார் . இவர் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க திருக்குறள் தீர்ப்பு தமிழக மாணவர்கள் முறைப்படி திருக்குறள் கற்க அடித்தளமாக அமைந்தது.
திருக்குறள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள எப்போது அழைத்தாலும் நேரம் ஒதுக்கிக் கொடுப்பார்.
அரசு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.எஸ்.இராஜரெத்தினம் என்பவர் 2015ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிப்பேராணை மனு [W.P.(MD) No. 11999 of 2015] ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 226-ன் கீழ் அடுத்து வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை சீர்படுத்த வேண்டும்; ஒரு மாணவன் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து வெளியேறும்போது 1,330 திருக்குறள்களையும் அறிந்தவனாக இருக்க வேண்டும்; இதை அரசு கொள்கை அளவில் ஏற்று குறள்களை வகுப்பு 6 லிருந்து 12 முடியத் தனிப்பாடமாக அமைத்து நடைமுறைப் படுத்தவேண்டும்; எனவே, அந்த மனுவை விசாரித்து நீதிமன்றம் அதற்கான தக்க செயலுறுத்தும் நீதிப்பேராணை (Writ of Mandamus) வழங்க வேண்டுமென்று கோரியிருந்தார்.
இவ்வழக்கு மாண்புமிகு நீதியரசர் திரு ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மனுதாரருக்காக வழக்கறிஞர் A.சரவணகுமார், பிரதிவாதிகளுக்காக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் VR சண்முகநாதன் வாதிட்டனர் .
இருதரப்பு வாதங்களையும் விசாரித்து, மாணவ மணிகள் தங்கள் வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்ள, ஒரு ஊக்க சக்தியாகவும் எதிர்கால சமுதாயம் பாதுகாப்பு மிக்க ஒழுக்கமுள்ளதாக மேம்பட்டு மிளிரவும் வலுவானதொரு அடித்தளமாக அமைய, திருக்குறளைக் குறிப்பாக ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறளில் முதல் இரண்டு பகுதிகளான அறத்துப்பால், பொருட்பால் பிரிவுகளில் அடங்கிய குறட்பாக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து நடைமுறைப் படுத்தவேண்டும்; என்று மாண்புமிகு நீதியரசர் திரு ஆர் .மகாதேவன் ஏப்ரல் 26, 2016 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.
இவர் மூன்றில் அரங்கநாதன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது (18 ஜூலை 2024 முதல்)உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
சமுதாயம் மேம்பட நல்லதொரு தீர்ப்பை வழங்கிய நீதியரசரை தமிழுலகம் என்றும் நினைவில் வைத்து வாழ்த்தும். அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியினை உரித்தாக்குவோம். பொதுநல வழக்குத் தொடர்ந்த சமூக அக்கறை கொண்ட திரு. எஸ்.இராஜரெத்தினம் அவர்களுக்கும் நன்றி சொல்வோம்.
இன்றைய சூழலில் கற்பிப்பதன் மூலம் கண்ணியத்தையயும் ஒழுக்க நெறிமுறைகளையும் இளைஞர்களின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, திருக்குறள் கோட்பாடுகளை இளைஞர்களிடத்தே கொண்டு சென்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை பிறப்பித்த ஆணையினை நடைமுறைப்படுத்தும் வகையில் உரிய அரசாணை எண் 51 தேதி 21/03/2017 பிறப்பித்த பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசின் செயல்பாடு மிகவும் போற்றத் தக்கது. அரசுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்வோம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியோர் ஒருங்கிணைந்து அரசின் ஆணையை ஏற்று, திருக்குறள்களை ஆறுமுதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வயது மற்றும் வகுப்பைக் கணக்கீடு செய்து அதற்கேற்றவாறு நன்னெறிக் கல்விக்கான பாடத் திட்டத்தினை ஆய்ந்து ஆய்ந்து, வகுத்து, 240 திருக்குறள்களை பாடத் திட்டத்தில் சேர்த்து, குறிப்பிட்ட காலவரைக்குள் செம்மையாக நடைமுறைப் படுத்தியுள்ளார்கள்.