Skip to content

“திருக்குறளும் காந்தியடிகளும்”-3

திருக்குறளும் காந்தியடிகளும் -3
(சி இராஜேந்திரன்)

மன உறுதியுடன் மோகன் மேற்கொண்ட சோதனைகள் பல திறத்தன- சைவ உணவுப் பழக்கம் மனித உறவுகள், சமயம் ,எளிமையான கட்டுப்பாடான வாழ்க்கை போன்ற எல்லாமே அவர் தனது ஆன்மா மேம்பாட்டுக்காக மேற்கொண்ட பரிசோதனைகள்.

செங்கடல் பகுதியில் மோகன் சென்ற கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆங்கிலப் பிரயாணி ஒருவர் மோகனிடம் பேச்சுக் கொடுத்து அவரை எல்லோரிடமும் அமர்ந்து உணவு உண்ண ஆயத்தப்படுத்தினார் .மோகன் தான் மாமிச உணவு உண்பது இல்லை ஆதலால் மற்றவர்களோடு அமர்ந்து உண்ணுவதில்லை எந்த உணவு புலால் உணவாக இருக்குமோ என்று ஐயமே இதற்கு காரணம் என்றார். அந்த ஆங்கிலேயர், “மது மாமிசம் இரண்டையும் , அவரால் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஒருவேளை மது அருந்தாமல் அவர் சமாளித்தாலும் , கப்பல் இங்கிலாந்தை நோக்கி பயணிக்க பயணிக்க , பருவ நிலை மாற்றம் காரணமாக அவரால் புலால் உண்ணாமல் இருக்கவே இயலாது” என்றார்.

ஆனால் உண்மையான மனத்தோடு உயர்ந்த மோகன் அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதி மனதில் கொண்டு பயணத்தின் போதும் அதற்குப் பிறகு இங்கிலாந்திலும் புலால் உணவே இல்லை

மோகன் தன் அன்னை அருகே இல்லை என்றாலும் உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய உறுதி படைத்த மன த்துக்கு சொந்தக்காரர் .”வினைத்திட்பம் என்பது ஒருவர் மனத்திட்பம் மற்றை எல்லாம் பிற” என்பார் வள்ளுவர், ஒரு செயலைச் செவ்வனே செய்ய வேண்டும் என்றால் அதற்குத் தேவை மன உறுதியை தவிர வேறில்லை .மற்ற துணைக்காரணிகள் எல்லாம் இரண்டாம் பட்சமே . இது எந்த ஒரு செயலுக்கும் பொருந்தும் ;பழக்க வழக்கங்களுக்கும் பொருந்தும்.

பாரிஸ்டர் படிப்புக்காக மேற்கொண்ட கடல் பயணம் ஒரு வழியாக 27 /10/188 இல் நிறைவடைந்தது.

சௌத்தாம்ப்டன் துறைமுகத்தை அவர் வந்தடைந்தார்.அது ஒரு சனிக்கிழமை. இங்கிலாந்து செல்வதற்கான முன்னேற்பாடுகளில் ஒரு பகுதியாக அங்கே உள்ள நான்குபெரிய ஆளுமைகளுக்கு மோகன் அறிமுகம் கடிதம் கொண்டு வந்திருந்தார் அவர்கள் டாக்டர் பிஜே மேத்தா ஶ்ரீ தள்பத்ராம் சுக்லா இராஜா ரஞ்சித் சிங், தாதாபாய் நௌரோஜி ஆவர்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். (முக)

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். (முவ)

தம்மை விட அறிவு ,வயது, ஒழுக்கம் ,அனுபவம் இவற்றை உடையவர்களை துணையாகக் கொண்டு வாழ்க்கைப் படகைச் செலுத்தினால் பயணம் இனிமையாக இருக்கும் ,அத்தகையவர்களின் துணையை பெறுவதே “அரியவற்றுள் எல்லாம் அரிது” , “வலிமைகளுள் எல்லாம் தலையாய வலிமை”என்கிறார வள்ளுவர்.

அந்த வகையில், பண்பாடு பழக்கவழக்கங்கள் இவற்றில் முற்றிலும் வேறுபட்ட ஒரு நாட்டில் டாக்டர் மேத்தாவின் துணையை மோகன்தாஸ் என்ற 19-வயது இளைஞன் உறுதியாகக் கொண்டார் .சென்ற உடனே டாக்டர் மேத்தாவுக்கு தந்தி கொடுத்து இருந்தார் . மேத்தா மாலை எட்டு மணி அளவில் மோகனைப் பார்க்க வந்தார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மேத்தா அருகில் அவரது தொப்பியை வைத்திருந்தார் . அப்போது சிறுவயது இளைஞனுக்கே உரிய ஒரு துடிப்புடன் ,மோகன் அவர் தொப்பியை எடுத்து கைகளால் தடவிப் பார்த்தார். அது ஒரு வகை விலங்கின் மயிர்களால் செய்யப்பட்ட தொப்பி.மோகன் அந்த தொப்பியை எடுத்து தடவிப் பார்த்தவுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட முடிகள் கலைந்து விட்டன .மேத்தா சற்று கோபத்துடன் மோகனைப் பார்த்து, அப்படியெல்லாம் அடுத்தவர் பொருளை அவர்களுக்கு கேட்காமல் தொடக் கூடாது, கையில் எடுக்கக்கூடாது என்று கூறிவிட்டு அவருக்கு இங்கிலாந்து பழக்க வழக்கங்களைப் பற்றி எடுத்துக் கூறினார்.

(தொடரும்…)

செப்டம்பர் -2024
கிராம ராஜ்ஜியம்(3)
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org