Skip to content

“திருக்குறளும் காந்தியடிகளும்”-1

திருக்குறளும் காந்தியடிகளும்
சி இராஜேந்திரன்

மோகன் என்ற 19 வயது இளைஞன் இங்கிலாந்து சென்று (வக்கீல்) பாரிஸ்டர் படிப்பு எதற்காகப் படிக்கச் சென்றார், என்ற கேள்வி அவர் படிப்பை முடிக்கும் தருவாயில் கேட்கப்பட்டது .”அதற்கு ஒரே சொல்லில் பதில் கூற வேண்டுமானால் அது உயர் அவா -உயர்ந்த குறிக்கோள்”என்ற ஒன்று என்றார். மகாகவி பாரதியார் ” பெரிதினும் பெரிது கேள்” என்பார் .வள்ளுவப் பெருந்தகையோ “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”, “முயற்சி திருவினையாக்கும்”, “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தந்தம் உள்ளத் தனையது உயர்வு” என்கிறார்.

வாழ்வின் இலக்கு , ஒருவர் வளரும் சூழலில் , அந்தந்த நிலையில் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இங்கிலாந்து சென்றால் நன்றாகப் படித்து பாரிஸ்டர் பட்டம் பெறலாம் ;இந்தியா திரும்பிய பிறகு ,வழி வழியாக வந்த பாரம்பரியப்படி உயர்ந்த பதவி வகிக்கலாம் ; நல்ல வழியில் பொருள் ஈட்டலாம்;நல்ல நிலையில் வாழலாம் .அதுதான் மோகனின் தந்தையின் எதிர்பார்ப்பாகவும் கனவாகவும் இருந்தது என்றால் மிகையல்ல.

மோகனினின் இங்கிலாந்து வாழ்க்கை முழுவதும் நம்பிக்கை – நம்பிக்கையின்மை என்ற இரண்டு கரைகளுக்கு இடையே தான் நடைபெற்றது . வாழ்க்கைப் பயணம் என்ற ஆற்றில் கால ஓட்டம் பல்வேறு திசைகளில் இழுத்துச் செல்லும். ஏற்ற இறக்கங்கள் இருக்கும் . ஆனால் முடிவாகக் கடலைச் சென்று சேரும்.