Skip to content

திருவிக வழங்கும் விளக்கம் – அறத்தாறு இதுவென வேண்டா….

திருவிக வழங்கும் விளக்கம்

அறத்தாறு இதுவென வேண்டா என்ற குறள் 37-வது குறளாக பரிமேலழகர் வைத்திருக்கிறார் .

ஆனால் திருவிக தனது விருத்தி உரையில் இதை நாற்பதாவது குறளாகக் கொண்டு உரை எழுதி உள்ளார் .இந்த குறள் சற்றே நுட்பமானது . விளக்கம் விவாதத்துக்குரியது .

இதனை எவ்வாறு திருவிக அவர்கள் அணுகுகிறார் என்பதை நாம் பார்ப்போம் .அவர் இந்த குறளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டுள்ளார்

அறத்தாறு ஒரு பகுதி

இது என வேண்டா இரண்டாம் பகுதி

சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை மூன்றாம் பகுதி என்று மூன்றாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக விளக்கிச் செல்கிறார்

 

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை

பொருள்

அறத்து ஆறு -அறநெறி,
இது என வேண்டா –
இத்தன்மையது என்று ஆராய்ந்து சொல்ல வேண்டுவ தில்லை,
சிவிகை பொறுத்தானோடு-
(அந்நெறி) பல்லக்கைச் சுமந்து செல்வானோடு;
ஊர்ந்தான் இடை-
(அதில்) ஏறிச் செல்வோனிடம் (கண்கூடு).)

கருத்து

அறநெறி இத்தன்மையதென்று ஆராய்ந்து கூற வேண்டுவ தில்லை.

விருத்தி

அற வொழுக்கத்துக்கு அறநெறி இன்னது என்னுந் தெளிவு வேண்டும். தெளிவு இப்பாட்டில் இருத்தலால் இஃது அறப்பேற்றுத் தலைப்பின்கீழ் இறுதியில் வைக்கப்பட்டது. இப்பாட்டு இவ்வதிகாரத்திலுள்ள எல்லாப் பாக்கட்கும் பொதுமை வழங்கிக்கொண்டிருப்பது. இதனாலும் இஃது இறுதியில் வைக்கப்பட்டது.

அறத்தா றிதுவென வேண்டா

அறத்து ஆறு அறநெறி, அறவழி; அறத்தின் பயன் எனினுமாம்.

ஆறு அறுந்து சென்று ஒழுங்குபட்டது; நெறி: (நெறி – வழி, மார்க்கம்; பயனுமாம்).

இது இத்தன்மையது; இன்னது நெறி.

என – என்று சொல்ல, என்று ஆராய்ந்து சொல்ல. வேண்டா – வேண்டுவதில்லை.

முதலில் அறத்தாறு என்ற சொல்லுக்கு திருவிக அவர்கள் தரும் விளக்கத்தைக் காணலாம்.

1. அறத்தாறு

அறத்து ஆறு – அறநெறி, அறவழி;
அறத்தின் பயன் எனினுமாம்.

அறம் நுண்மை; ஒரு நிலை. அதை அடைதற்கு நெறி வேண்டும். நெறியற்ற எதுவும் வாழ்வுக்குப் பயன் படுவதில்லை. நெறியற்றது இருத்தலும் இல்லாததும் ஒன்றே.

அடைவுக்கு நெறி இன்றியமையாதது. நெறியே நடந்து சென்றால் குறிப்பிலுள்ள இடத்தை அடைதல் கூடும். சிவ நெறி, இஸ்லாம் மார்க்கம் முதலிய வழக்காறுகளைநோக்குக. அறத்துக்குரிய நெறி அறநெறி எனப்படும். அஃது ஈண்டு அறத்தாறு என்னப்பட்டது.

அறம் பொதுவானது. அஃது எல்லா உயிர்க்கும் உரியது. அஃது ஒரு கூட்டத்தவர்க்கு மட்டும் உரியதன்று. அறம், மண் நீர் காற்று ஒளி போன்று எல்லா உயிர்க்கும் பொதுவகையில் பயன்படுவது. அறநெறியும் அத்தகையதே.

அறநெறியில் எவ்வுயிரும் செல்லலாம். அந்நெறியில் இவ்வுயிர் செல்லலாம், இவ்வுயிர் செல்லலாகாது என்னும் நியதி இல்லை.அது சில வுயிர்க்கு விரிந்தும் சில வுயிர்க்குச் சுருங்கியும் நிற்பதன்று. அஃது எவர்க்கும் பொதுமையில் இடந் தருவது.

அறநெறி,

‘கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே என்னரசே யான்புகலு மிசையுமணிந் தருளே’

என வரும் இராமலிங்க சுவாமிகள் பொன்மொழிக்கு இலக்கியமென விளங்குவது.

வாழ்வும் தொழிலும்

அறத்தாறு உயிர்களின் வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் ஒன்றியிருப்பது. அது நிலவாத வாழ்வே இல்லை என்று கூறலாம். அதையுணர்ந்து அதன் வழியே நடக்க உயிர்கள் கடமைப்படல்வேண்டும். அறவழியே நடந்தால் அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்களினின்றும் விடுதலை எய்தல் கூடும்; குணமென்னுங் குன்றேறி நிற்றல் கூடும்.

வாழ்வுக்கூறுகள் என்பன தொழின்முறைகளை யொட்டி அமைவன. தொழின் முறைகளுக் கேற்ற வண்ணம் வாழ்வுக் கூறுகள் அரும்பி மலர்தல் இயற்கை. வாழ்வுக்குரிய தொழின் முறைகளெல்லாம் அறநெறியை அடிப்படையாகக் கொண்டே இயற்கையினின்றும் முகிழ்த்து நிற்பன. தொழின் முறைகள் அறவழி நடை பெறின், உலகில் வாழ்வுக் கூறுகள் இயற்கை வழி வளரும்; வளர்ந்து பண்படும்; பண்பட்ட வாழ்வுக் கூறுகள் உலகிடை அமைதியை நிலைபெறுத்தும். தொழின் முறைகள் அறவழியில் நிகழா தொழியின், வாழ்வுக் கூறுகள் இயற்கை வழியில் வளராது குறைபடும். அக் குறைபாடு உலகிடை அமைதியைக் குலைத்துப் போராட் டத்தைப் புகுத்தும்.

உலகம் அறநெறியில் இயங்குதற்கென்று மக்களிடை நானாவித இயல்புகளும், அவ்வியல்புகளுக்கேற்ற நானா விதத் தொழின் முறைகளும் இயற்கைவழி அமைந்துள்ளன. அவ்வவ்வியல்பினர் அவ்வத் தொழின்முறையில் ஈடுபடுதல் வேண்டும்; மாறுபட்ட ஈடுபாட்டால் மன்பதை குலைவுறும்.

உயர்வு தாழ்வு

தொழின் முறைகளைப் பொறுத்தவரை, அவை களிடை உயர்வு தாழ்வு கிடையா. தொழின் முறைகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படின் மன்பதையின் அமைதி கெட்டே போகும். ஒருவர் தம் இயல்புக்கேற்றபடி உழவரா கிறார்;மற்றொருவர் வாணிபராகிறார்; இன்னொருவர் மன்னராகிறார்.

அவ்வத் தொழிலின் அடியில் அறநெறி பொதுவாகவே இலங்குகிறது. ஒவ்வொருவரும் அவ்வற நெறியினின்றும் வழுவாது தொழில் புரிந்தால் எல்லாரும் அறவோராகலாம். அறவோராகும் வாய்ப்பு எவர்க்கும் உண்டு. அறவழி நடப்போர்க்கு வாய்ப்புப் பயன் தரும். அறவழியில் நடவாதார்க்கு வாய்ப்புப் பயன் அறவோராகும் வாய்ப்புப் தராது. பிறப்பையொட்டி சிறப்பதன்று. பிறப்பில் உயர்வு தாழ்வில்லை. அவரவர் தத்தம் இயல்புக்கு ஏற்ற வண்ணம் ஏற்கும் தொழில்முறையை அறநெறியில் அறநெறியில் நின்று நடாத்தி வரின் எவரும் அறவோராகலாம்.

உலகில் சிலச்சில சமயம் புரட்சி உண்டாகிறது. காரணம் என்ன? காரணம் பலபடக் கூறலாம். தொழில் முறைகளில் உயர்வு தாழ்வு கற்பித்தல், பிறப்பில் உயர்வு தாழ்வு கொள்ளல், தொழின்முறைகள் அறநெறியினின்றும் பிறழ்தல் முதலியவற்றைச் சிறப்பாகக் குறிக்கலாம்.

புரட்சி இயற்கையின் ஆணைப்படி எழுந்து, கற்பிதங்களை யொழித்து, அறநெறியை விளக்கி அடங்கிவிடும். அறநெறி மறக்கப்பட்ட இடங்களிலேயே புரட்சி எழும். மற்ற இடங்களில் அஃது எழாது. புரட்சி எழாதவாறு காப்பதே அறிவுடைமை; அதற்கு அறநெறி நடக்கை வேண்டும். அவரவர் தத்தம் இயல்புக்கேற்ற தொழின் முறைகளில் ஈடுபட்டால் அறநெறி நடக்கை தானே கூடும்; வாழ்வு அறக்கோட்டினின்றும் வழாது நின்றியங்கும்; மன்பதையில் அமைதி நிலவும். எல்லாவற்றிற்கும் அடிப்படை அறநெறி.

முதலில் அறத்தாறு என்ற சொல்லுக்கு திருவிக அவர்கள் தரும் விளக்கத்தைப் பார்த்தோம் . அடுத்து இரண்டாவதாக “இதுவென வேண்டா” தொடருக்கு திருவிக அவர்கள் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.

2.இதுவென வேண்டா

அறநெறி எங்கும் என்றும் ஒரே தன்மையதா யியங்குவது. அந்நெறி ஒரிடத்தில் ஒரு தன்மையதாகவும், மற்றோரிடத்தில் மற்றொரு தன்மையதாகவும் இயங்குவதன்று. அதனிடத்தில் காழ்ப்பில்லை; கரவில்லை; இகலில்லை. அது பொதுமையது. அத்தகைய ஒன்றை எத்தன்மையதென்று கூறுவது? அதை இத்தன்மையது அத்தன்மையது என்று கூற வேண்டுவதில்லை. அதற்கென்று பெரிய ஆராய்ச்சித் துறையில் இறங்க வேண்டுவதுமில்லை. ஆசிரியர் ‘அறத்தாறு இதுஎன வேண்டா’ என்று உலகுக்கு அறிவுறுத்திய அருமைப் பாட்டை நோக்குக. ‘அறநெறி இதுவா அதுவா’ என்று ஆராய்ந்து சொல்லவேண்டுவதில்லை.

அறநெறி ‘அது’வாகவும் ‘இது’வாகவும் விளங்கி, எங்கும் என்றும் பொதுவாக நிற்கும் தன்மை வாய்ந்தது.

இதுவரை “அறத்தாறு” என்ற சொல்லுக்கும் “இதுவென வேண்டா” தொடருக்கும் திருவிக அவர்கள் தரும் விளக்கத்தைப் பார்த்தோம் . நிறைவாக
“சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை” என்ற உவமைத் தொடருக்கும் வள்ளுவர் வலியுறுத்தும் உண்மைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.

3.”சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை”

பொறுத்தல் – கவாவுதல், தாங்குதல், சுமத்தல்.
இடை – இடம்; இடத்தில்.

சிவிகை…இடை

அறநெறியின் பொதுமையை விளக்குதற்கு ஆசிரியர் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார். அவ்வெடுத்துக்காட்டு உன்னற்பாலது. அது, ‘சிவிகை ஊர்ந்தானிடை’ என்பது. பொறுத்தானோடு

எடுத்துக்காட்டு

பாதைகளில் செல்லும்போது பலபொருள் காட்சி யளிக்கின்றன. அவற்றில் கண்ணைக் கவர்வன ஊர்திகள். ஊர்திகளில் மனிதரை மனிதர் சுமக்கும் ஒன்று விரைந்து கருத்தை ஈர்க்கும்.

ஆசிரியர் காலத்தில் பலதிற வண்டிகள் இருந்தன. அந்நாளில் செல்வர் பெரிதும் சிவிகையில் ஊர்ந்து செல்வது வழக்கம். ஆசிரியர் கருத்தில் அது படிந்திருக்கும். அஃது அறநெறிக்கு எடுத்துக்காட்டாக அவர்தம் உள்ளத்தினின்றும் உதித்தது.

ஆசிரியர் தங் காலத்தில் கண்டதை காட்டாகக் கொண்டனர். எடுத்துக்காட்டின் நிலையை எடுத்துக் ஆளப்பட்டதோ அதன் வழிநின்றே காணச் சிந்தித்தல் வேண்டும். அவ்வெடுத்துக்காட்டு பொருளுண்மை ஆசிரியன்மார் தாங் காண்பதை எடுத்துக்காட்டாகக் கொள்வது மரபு. அவ்வெடுத்துக்காட்டுகள் காலப்போக் சிலபோது பொருந்துவனவாகவும் சிலபோது பொருந் தாதனவாகவும் தோன்றும்.

மோட்டார் வண்டிகள் மலிந்துள்ள இந்நாளில் சிவிகையூர்தலும், மனிதரை மனிதர் சுமத்தலும் நகைக்கற்பாலனவாகவும் அநாகரிகமாகவும் தோன்றலாம். திருவள்ளுவர் காலத்தில் மோட்டாரில்லை; மோட்டார் இருந்தால் அவர்தங் கருத்து அதன்மீது சென்றிருக்கும். இப்பொழுது சிவிகையை மோட்டாராகவும், சிவிகையில் செல்வோரை மோட்டாரிற் செல்வோராகவும், சிவிகையைத் தாங்கிச் செல்வோரை மோட்டார் ஒட்டு வோராகவும் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகளைக் கால நிலைக்கேற்ற முறையிற் கொண்டு, பொருள்மீது கருத்துச் செலுத்துவது சிறப்பு.

இங்கே இரு சார்பினர் உளர் ; ஒருவர் பல்லக்கைத் தாங்கிச் செல்வோர்; மற்றொருவர் பல்லக்கில் ஏறிச் செல்வோர். இவ்விருவரிடை ‘அறத்தாறு` எங்ஙனம் நிலவுகிறதென்பது ஈண்டைக்குரிய ஆராய்ச்சியாகும்.

ஊழ்

‘அறத்தாறு’ என்பதற்கு அறத்தின் பயன் என்று பொருள் கொண்டு, ஊழைக் கருத்திருத்திப் பல்லக்கைத் தாங்குவோர் தீவினை செய்தோ ரென்றும், பல்லக்கில் ஏறிச் செல்வோர் நல்வினை செய்தோ ரென்றும் விளக்க உரை கூறுவோருளர். ‘அறத்தின் பயன் இஃது என்று சொல்ல வேண்டுவதில்லை. ஏன்? அது பல்லக்கைச் சுமப்பவரிடத்தும், பல்லக்கில் ஏறிச் செல்வோரிடத்தும் வெளிப்படையாக விளங்குவது’ என்று அவர் சொல்வர்.

ஊழை உளங்கொண்டு பொருள் கூறுவதில் உயர்வு தாழ்வு தோற்றத்துக்கு இடம் நேரும். அது போராட்டத்தை எழுப்புவதாகும்.

ஆசிரியர் ஊழில் உறுதி யில்லாதவரல்லர். அவர்க்கு அதன்கண் உறுதியுண்டு. ஊழுக்கெனத் தனி அதிகாரம் ஒன்று அவரால் அருளப்பட்டது. ஊழ் இப்பாட்டில் இடம் பெறவில்லை என்பது எனது கருத்து. விளக்கம் ‘ஊழ்’ அதிகாரத்தில் செய்யப்படும்.

ஊழிற் கருத்திருத்தாது, ‘அறத்தாறு’ என்பதற்கு அறநெறி என்றே நேர்பொருள் கொண்டு. அறநெறி இருசாராரிடத்தும் பொதுமையாக விளங்குவது என்று விளக்க உரை பகர்வது ஏற்புடைத்தாகும்.

பொதுமை

தொழின் முறைகள் ஒழுங்காக நடைபெற்றாலன்றி உலகில் அமைதி நிலவாது.அத்தொழின் முறைகளை யொட்டிப் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது அமைதி காப்பதாகாது. தொழின்முறை எதுவாயினும் ஆக. தொழில் புரிவோரிடை உயர்வுமில்லை; தாழ்வுமில்லை. எத்தொழின் முறையிலும் அறநெறி பொதுவாக நிலவிக்கொண் டிருக்கும். பொதுவில் நிலவும் அறநெறியில் நடைபெறும் தொழின் முறைகளில் உயர்வு ஏது? தாழ்வு ஏது?

பல்லக்கைத் தாங்கிச் செல்வோரும் மனிதரே. அதில் ஏறிச் செல்வோரும் மனிதரே. இருவரும் ஒரு வழியில் பிறந்தவரே யாவர். இருவரும் தொழின் முறையில் ஈடு பட்டவரே யாவர். அறநெறி தொழிலிடைப் பொதுவா பலங்குவது. அறநெறி, பல்லக்கைத் தாங்கலில் சுருங்கியும், அதில் செல்கையில் பெருகியும் நிற்பதோ? இல்லை. பல்லக்கைச் சுமந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோராகலாம். பல்லக்கில் ஊர்ந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோராகலாம். அறவோராகும். வாய்ப்பு இருவர்க்கும் உண்டு. ஒருவர்க்கு மட்டும் அவ்வாய்ப்பில்லை. ‘அறத்தாறு’ ஒரு சாரார் பக்கஞ் சாயுந் தன்மையுடையதன்று. ஆகவே, ‘அறத்தா றிதுவென வேண்டா’ என்றார். என்னை? அது, ‘சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ வெளிப் படையாக விளங்கலான் என்க. ‘அறநெறி எத்தன்மைய தென்று ஆராய வேண்டுவதில்லை. அந்நெறி வழாத நடை வேண்டும்’ என்பது கருத்து.
www.voiceofvalluvar.org
29/08/24