Skip to content

சான்றாண்மை

ஐந்து பண்புகள் கடைப் பிடித்து வாழ்…
இல்லையெனில் 2 பண்புகள்…
அதுவும் இல்லையெனில்
ஒரே ஒரு பண்பு ….

சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல் ஐந்து குணங்களேனும் வேண்டும். அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்தல். எவரையும் உற்ற உறவாய்க் கொள்ளு தல். இயன்றவரையில் எளியவர்க்குதவுதல், எப்போதும் உண்மையே பேசி மகிழ்தல் என்பன. இவை ஐந்தையும் தூண்களாக நிறுத்தி, மேலே சால்பைப் பரப்பி வள்ளுவர் கட்டித் தந்த கட்டடமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சான் றாண்மைக் கட்டடமாகும்.

இவை ஐந்தையும் பின்பற்ற முடியாவிட்டாலும், இரண்டு குணங்களையாவது கைக்கொள்ளுங்கள்; அது போதும் சான்றாண்மைக்கு’ என்று வள்ளுவர் கூறுகிறார் ஒன்று; உயிர்களைக் கொல்லாதே; மற்றொன்று; பிறர் தீமை சொல்லாதே என்பன. முன்னதை நோன்பு என் றும், பின்னதை சால்பு என்றும் அவர் கூறுகிறார் இதிலி ருந்து கொல்லர் நலத்தைவிடப் பிறர் தீமை சொல்லா நலமே சிறந்தது என்றுந் தெரிகிறது. வாள் இல்லாத ஒருவன் கொல்லாது இருந்துவிடக்கூடும். நா இருந்தும் தீமை சொல்லாதிருப்பதே ஆண்மையாகும். வாள்முனை கண்ட வரை மட்டுமே கொல்லும்; நா முனை கோட்டை கட்டி வாழ்பவரையும் கொன்று குவித்துவிடும். அத் தகைய வலிமையுடைய நாவை அடக்கி ஆள்வதும்,எவ்வு யிரும் தன்னுயிர்போல் எண்ணி வாழ்வதுமாகிய இரு குணங்களேனும் சான்றாண்மைக்கு வேண்டாமா? என வள்ளுவர் சலுகைகாட்டி வேண்டுகிறார்.

இந்த இரண்டையுங்கூடச் செய்ய முடியாவிட்டால் ஒன்றையாவது செய்யுங்கள் என்று, வள்ளுவர் இரக்கங் காட்டி வேண்டுகிறார் அது, ‘தீமை செய்தவனுக்கு நன்மை செய்துவிடு என்பதே .இஃது அவனுக்குப் பெரிய தண்டனை என்றும் அவர் கூறுகிறார். அது மட்டுமன்று; வேறு தண்டனைகளால் அவனைத் திருத்த முடியாது; இத்தண்டனையால் அவன் கட்டாயம் திருந்தியே விடு வான் என்றும் நம்புகிறார். அவனால் உனக்கு நன்மை; உன்னால் அவனுக்கு நன்மை; இருவரால் நாட்டிற்கும் நன்மை.இந்தப் பண்பு ஒன்று மட்டும் உன்னிடந்தோன்றி விட்டால், நீ வறுமையிற் கிடந்து உழன்றாலும் உனக்கு இழிவு வராது; மாறாக சிறப்பேமிகும்.”இந்த ஒன்றுகூட உன்னாற் செய்ய முடியாமற் போகுமானால், நீ மனித னாய்ப் பிறந்து தான் என்ன?” என்று அவர் வருந்திக்கேட்பது உள்ளத்தையே உருக்கும் தன்மை வாய்ந்த தாகும்.

முத்தமிழ்க் காவலர் கிஆபெ
திருக்குறள் கட்டுரைகள் (1958)