Skip to content

குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

சிறப்புத் தொடர்-4

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார்

எது அறிவுடைமை..,?
இன்றைய தமிழகம் எங்கே செல்கின்றது…?

முன்னேற்றத்திற்கு மூன்று காரணிகள்…

ஒரு சமுதாயம் முன்னேற மூன்று முக்கியமான காரணிகள் உள்ளன …,காலம் ,ஊக்கம் , அறிவுடைமை .இந்த மூன்றையும் குறித்து அடிகளாரின் சிந்தனையைக் காண்போம்…..

காலம் மனிதனின் சிறந்த கருவி. அதை உணர்ந்து பயன்படுத்துகிறவன் வளர்கிறான்; முன்னேறுகிறான். மனிதன் பெறக்கூடிய அறிவு, செல்வம், புகழ் ஆகிய பேறுகள் அனைத்தையும் காலம் என்ற கருவியின் மூலமே மனிதன் அடைகின்றான். ஆதலால் காலத்தே செய்ய வேண்டு மென்பது வள்ளுவ நெறி.

ஊக்கமுடைமை

மனித உயிருக்கு இயல்பிலேயே அறிவறியும் ஆற்றல் உண்டு. கிளர்ந்து எழுகின்ற இயல்பும் உண்டு. உயிரின் இந்தக் கிளர்ந்தெழும் ஆற்றல் நல்வழிப் படுத்தப்பெறும்பொழுது சிறந்த பயனைத் தருகின்றது. உயிர் கிளர்ந்தெழுந்து செயல் செய்யும் உணர்வுக்கு ஊக்கமுடைமை என்பது பெயர். ஒப்பற்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மனிதன் விரும்புவானாயின் அவனுக்கு முதலில் தேவை ஊக்க முடைமை. ஊக்கமுடையவர்கள் முற்பிறப்பு, அவ்வழிவரும் பலாபலன்களை நம்பமாட்டார்கள். அப்படியே ஒருகால் நம்பினாலும் தம்முடைய முயற்சியால் அதை மாற்றியமைக்க முடியும் என்ற உறுதிப்பாடு தோன்றும்.திருவள்ளுவர்,’கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்று கூறுகின்றார். ஆதலால் மனிதனுடைய ஊக்கம், அவ்வழி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்று

முற்போக்குச் சமுதாயம் அமையக் காலமும் ஊக்கமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானது அறிவும் …,ஏன்?

காலத்தையும் ஊக்கத்தையும்விட அறிவுடைமை மிகமிக இன்றியமையாதது. அறிவுடைமைதான் காலத்தையும் ஊக்கத்தையும் முறைப்படி பயன்படுத்தத் துணை செய்கின்றது.

சோஷலிச சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டுமானால், மக்களிடத்தில் சரியான அறிவு பரவுதல்வேண்டும். சென்ற காலத்தில் தனி மனித வாழ்க்கையிலும் சரி, சமுதாய வாழ்க்கையிலும் சரி ஏற்பட்டுள்ள எண்ணற்ற தவறுகளுக்கு அடிப்படை அறியாமையேயாகும். மயக்கத்தின் பாற்பட்ட – முறை பிறழ உணர்ந்த அறிவினாலும் தவறுகள் நிகழ்வதுண்டு.

வாழ்க்கை ஆக்கத்தின் பாற்பட்டது.
ஆக்கமும் அறிவினாலாயது.

ஆனால், ‘ஆக்கம் அறிவினாலும் முயற்சியினாலும் ஆவதில்லை-அது அவன் செயல்’ என்று கருதி வாழ்க்கையை இழந்தோர் ஏராளமானவர்கள்.

இதனை யுணர்ந்த திருவள்ளுவர் அறிவுடைமையின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார். அவர் காட்டும் அறிவு அமிழ்ந்து கிடக்கும் அறிவு அல்ல; அத்திட்டத்தை எதிர் நோக்கியிருக்கும் அறிவல்ல; ஆண்டவனையே நம்பிக் கிடக்கும் அறிவுமல்ல; ‘அறிவுடையார் ஆவதறிவார்’ என்று திருவள்ளுவர் கூறுவது மிகச் சிறந்த கருத்து. சோஷலிச சித்தாந்தத்திற்கு உடன்பட்ட கருத்து.

உலகம் தொன்மையானது. சென்ற காலத்திலும் உலகம் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்று வாழும் பலர், அறிவிலும் உணர்ச்சியிலும் சென்ற காலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். அஃது அறிவின் சின்னமல்ல. இன்றைய உலகம் எங்ஙனம் இயங்குகிறதோ அதன் இயல்புக் கேற்றவாறு தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் அறிவுடைமை.

யதார்த்த உலகம், நடைமுறையனுபவம் இவற்றோடு இணைக்கப்பட்ட அறிவே அறிவு என்பது சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படை. இதனைத் திருக்குறள்,

“எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு’

என்று பேசுகின்றது.

மேலும், அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. அஃது நிலைபெற்ற தன்மையுடையதல்ல. இன்றைய அறிவு நேற்றைய அறிவைவிட வளர்ச்சியுடை யதாக இருக்க வேண்டும். இன்றைய அறிவைவிட நாளைய அறிவு வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இதுவே உலக நியதி. திருவள்ளுவரும்,

‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’

என்ற குறட்பாவின் மூலமும் இக்கருத்தை வலியுறுத்துகிறார். ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்ற சொற்றொடராலும் அறிவின் வளர்ச்சியைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளுகின்றார்.

1. மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் அறிவு இன்றியமையாதது;

2. அறிவு, உலகியலில் யதார்த்த நடப்புக்கு ஒத்திருக்க வேண்டும்;

3. அறிவு வளர்ச்சி அடையக்கூடியது,

என்னும் மூன்று கருத்துக்களும் சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள். இம்மூன்றையும் நூற்றாண்டின் மக்கள் மன்றத்தில் அறிமுகமான சோஷலிச சித்தாந்த இலக்கியப் படைப்புக்கள் விரிவாக ஆராய்ச்சி செய்கின்றன.

அக்கருத்தினையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் குறட்பா வடிவில் எடுத்துக் காட்டியுள்ளதை எண்ணுகிற பொழுது பெருமித உணர்ச்சி மேலிடுகிறது. எனினும் பெருமித உணர்ச்சி தோன்றிய சுவட்டையும்கூட கண்டு கொள்ள முடியாத வண்ணம் சிறுமை மூடிவிடுகிறது.

திருவள்ளுவர் காட்டிய அறிவுப் பார்வை இன்றளவும் தமிழகத்தில் வளரவில்லை. மாறாகத் திரிந்த கருத்துக்கள் கால்கொண்டுள்ளன. இன்றுஅறிவு என்றால் புத்தக அறிவு -,நிகழ்கால அறிவைவிடச் சென்றகால அறிவு சிறந்தது என்பன போன்ற கருத்துக்களே பரவி வருகின்றன. அதனாலேயே, தமிழ் இனம் வளர்ந்து வீழ்ந்து இருக்கிறது.

இந்த அவல நிலைமைக்குப் பிறகாவது திருவள்ளுவர் இனங்காட்டி எடுத்துக் கொள்ளத் தூண்டிய அறிவை எடுத்துக் கொள்வோமாக!

குன்றக்குடி அடிகளார்
நூல் வரிசை- தொகுதி-4
தொகுப்பு
www.voiceofvalluvar.org
28/07/24