சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், உரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
அந்த வகையில், திருக்குறள் ஏற்கனவே 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், மேலும் 100 மொழிகளில் மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிபுணர்களுக்கு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, செம்மொழி நிறுவன இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது:
தற்போது, 55 இந்திய மொழிகள், 45 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, செய்யுள் வடிவிலோ, உரைநடை வடிவிலோ நேர்த்தியாக, 10 மாதங்களில் மொழிபெயர்க்க வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும், 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு திறமையும், தகுதியும் உள்ள வல்லுனர்கள், ‘இயக்குனர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி சாலை, பெரும்பாக்கம், சென்னை – 100’ என்ற முகவரிக்கோ, tirukkuraltranslation@cict.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, ‘www.cict.in‘ என்ற இணையதளத்தை காணலாம்.