Skip to content

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண் உடையர் கல்லாதவர்

பேராசிரியர் ப பாண்டியராஜா
முகநூல் பக்கத்திலிருந்து….

கண்ணுடையோர் யார்?

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3

தற்காலச் சிந்தனைக்குச் சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, சாய்வு நாற்காலியில் காலை நீட்டி, கண்ணை மூடி அமர்ந்திருக்கையில், என் சிந்தனை பின் நோக்கிச் சென்றது. (அதற்கு ஓய்வு ஏது?)

பல ஆண்டுகளுக்கு முன்னர், மதுரை, கீழமாசி வீதியில் பலவிதமான பொருள்களை வாங்கிவிட்டு, கீழவெளிவீதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு உச்சி வெயிலில் நடந்துசென்ற சமயம் –

பசியும் தாகமும் பெருக்கெடுக்க – விளக்குத்தூண் அருகே ஒரு குறுக்குத் தெருவின் ஓரத்தில் ஒரு இளநீர்க்கடையைப் பார்த்துச் சென்றேன்.

ஒரு வயதான அம்மாள் – சுமார் 65 வயது இருக்கும். செக்கச் சிவந்த மேனி – தளதளவென்று வஞ்சகமில்லாமல் வளர்ந்த உடம்பு – காதில் பெரிய தண்டட்டி – கையில் ஒரு அரிவாள்.

“ஆத்தா, ஒரு இளநீர் கொடு.பருப்பு இருக்கணும். ஆனால் முத்தியிருக்கக்கூடாது. இளம் பருப்பாக் கொடு தாயே” என்று கேட்டேன்.

அப்போதே நிறையப் பற்கள் உதிர்ந்துபோய் இருந்த என்னை நிமிர்ந்து பார்த்த அந்த அம்மாளிடம் கூறினேன்.

“ஆத்தா பல்லு போச்சு. கடிக்கமுடியாது. அதனால்தான்”

தன் முன்னே குவியலாகக் கிடந்த அந்த இளநீர்க் காய்களை ஒரு நோட்டம் விட்டார் அந்த அம்மாள். வலப்பக்கம், இடப்பக்கம் எல்லாம் ஆராய்ந்து பார்த்தார்.

பின்னர், தனக்கு முன்னே சற்றுத் தள்ளி இருந்த ஒரு காயை எட்டி, அரிவாளை நீட்டி ஒரு கொத்துக் கொத்தி அலாக்காகத் தூக்கினார்.

வெகு நேர்த்தியாகச் சீவித் தந்தார்.

நீரைக் குடித்துவிட்டுக் காயை நீட்டினேன்.

ஒரே போட்டில் காயை இரண்டாகப் பிளந்தார்.

அதுவரைக்கும் எனக்குக் கொஞ்சம் tension.

பருப்பு எப்படி இருக்குமோ?

ஆனால் நான் எதிர்பார்த்தபடி பருப்பு நல்ல இளம்பருப்பாகவே இருந்தது.

ரசித்து, ருசித்து உண்டபின், காசு எவ்வளவு என்று கேட்டுக் கொடுத்தபின்,

“ஆத்தா, நான் ஒண்ணு கேக்கலாமா?” என்றேன்.

“என்ன?” என்றார் அவர்.

“இத்தனை காய் இருக்கே, நான் பாக்கும்போது எல்லாமே ஒண்ணாத்தான் தெரியுது. ஆனா உங்க கண்ணுக்கு மட்டும் அந்த இளம்பருப்புக் காய் எப்படித் தெரிஞ்சுது? ரொம்பச் சரியா, எட்டிக் கொத்தித் தூக்குணீங்களே!!” என்றேன்.

அந்த அம்மாள் என்னை உற்றுப் பார்த்தார்.

எதிரே இருந்த கடைக்கு மேலே இருந்த பெயர்ப் பலகையைக் கையை நீட்டிக் காண்பித்தார்.

”அந்த போர்டுல இருக்குற எழுத்து எல்லாம் எனக்கு ஒண்ணாத்தான் தெரியுது. ஆனா உனக்கு மட்டும் அது வேற வேற எழுத்தாத் தெரியுதுல்ல, அது மாதிரி”

அப்பொழுதுதான் நான் மேலே குறிப்பிட்ட திருக்குறள் எனக்கு நினைவுக்கு வந்தது.

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3

————————————-

இத்துடன் இது முடியவில்லை.

நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஆமாம், அந்தப் பெரியம்மா அன்றைக்கு என்ன சொன்னார்?

”அந்த போர்டுல இருக்குற எழுத்து எல்லாம் எனக்கு ஒண்ணாத்தான் தெரியுது. ஆனா உனக்கு மட்டும் அது வேற வேற எழுத்தாத் தெரியுதுல்ல”

எனக்கு இப்போது சுருக்கென்றது. நான் அந்தம்மா சொன்னதை மாற்றிப்போட்டுப் பார்க்கிறேன்.

”அந்தக் குவியல்ல இருந்த இளநீர் எல்லாம் எனக்கு ஒண்ணாத்தான் தெரிஞ்சுது. ஆனா அந்தப் பெரியம்மாவுக்கு மட்டும் அது வேற வேற இளநீராத் தெரிஞ்சிருக்கு”

எனக்கும் கண் இருந்தது. ஆனால் பார்க்கத் தெரியவில்லை.

‘கற்றோர்” என்று வள்ளுவர் குறிப்பிடுவது பள்ளிக் கல்வியைப் பெற்றவர்களை மட்டும் அல்ல. வாழ்க்கைக் கல்வியைப் பெற்றவர்களையும்தான்.

கல்வி கரை இல. கற்பவர் நாள் சில

ப.பாண்டியராஜா
07/10/2023
http://tamilconcordance.in/