Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு

September 21, 2021 @ 7:00 pm - 10:00 pm

மொரிசியசின் மேனாள் கல்வியமைச்சராகவும், யுனெசுக்கோவில் இயக்குனராக 12 ஆண்டுகளுக்குமேல் பாரீசிலும், புதுதில்லியிலும் உள்ள அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் தலைமையில் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு யுனெசுக்கோவிற்கு திருக்குறளைக் கொண்டுசெல்லும் “Thirukkural for UNESCO” குழு சார்பாக மே ,20 – 2023 அன்று தமிழ்நாடு தலைமைச்செயலர் முனைவர்.வெ.இறையன்பு,இ.ஆ.ப. அவர்களை வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு.சி.இராசேந்திரன் IRS (ஓய்வு) அவர்களும் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி அவர்களும் நேரில் சந்தித்து களப்பணிகளை, இதுவரை இந்த தன்னார்வ பன்னாட்டு அமைப்பு செய்துள்ள உலகளாவிய யுனெசுக்கோவில் திருக்குறள் பன்னாட்டுப் பரப்புரை முன்னெடுப்புகள், பன்னாட்டு ஆங்கிலக் கருத்தரங்கங்கள், சந்திப்புகள் என்று அனைத்தையும் பட்டியலிட்டு வழங்கினோம். 2020ஆம் ஆண்டுக்கு முன்பே ஐரோப்பா, மொரீசியசு , ஆத்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மூன்று கருத்தரங்கங்கள் “யுனெசுக்கோவில் திருக்குறள் ” கருத்தை மையப்படுத்தி நடந்துள்ளன.

இச்சந்திப்பில் எங்களோடு திருக்குறள் ஆர்வலர் திரு.மு.பொன்னியின் செல்வன் IIS , துணை இயக்குநர் , அவர்களும் கலந்துகொண்டு உதவினார்.

“Thirukkural for UNESCO” குழு 2020 முதல் இதுவரை நடத்தியுள்ள 25 ஆங்கிலக் கருத்தரங்குகளில், யுனெசுக்கோவின் மேனாள் இயக்குநர் (டைரக்டர்) செனரல் பேராசிரியர்.பெடெரிக்கு மேயோ கலந்துகொண்டு உரையாற்றிய திருக்குறள் தலைப்புகள் உள்ளிட்ட பல ஆளுமைகளின் பங்களிப்புகள் குறித்தும் குறிப்பிட்டோம்.

மேலும் யுனெசுக்கோவில் திருக்குறளை கொண்டு செல்வதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயவும், இதுவரை காந்தி, பாரதி, அரவிந்தர், அன்னை தெரசா போன்ற இந்தியாவிலிருந்து தனி ஆளுமைகள் குறித்த பரிந்துரைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு நாட்டிலிருந்து ஒரு நூல் யுனெசுக்கோவிற்கு பரிந்துரைக்குச் செல்வது முதன்முறையாக திருக்குறள்தான். இது முதல் முயற்சி. இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்றை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் , அதை ஆராய இக்குழு ஏற்படுத்திய யுனெசுக்கோவின் வரையறையை ஆராய்ந்து திருக்குறளை அவர்கள் எப்படியும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொண்டு செல்வது என்பதில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம், செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் , இயக்குனருடனான சந்திப்புகள், மாண்புமிகு பிரதமரை முனைவர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் சந்தித்து கையளித்த கோரிக்கை மனு, யுனெசுக்கோவில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கையளிக்கத்தக்க வகையில் நாம் உருவாக்கியுள்ள ஆவணம், உலக அளவில் திருக்குறளுக்கு , இத்திட்டத்திற்குத் துணைநிற்கும் ஆலோசனைக்குழுவின் விவரங்கள் ஆகிய அனைத்தையும் கையளித்து விரிவாக உரையாடினோம்.

தொடர்ந்து இந்த உயர்ந்த செயலை செய்துமுடிக்க இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டம் என்பதைக் குறிப்பிட்டு, திருக்குறள் யுனெசுக்கோவில் இடம்பெறவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை முன்னிறுத்தி அனைத்து ஆதரவுகளையும் திரட்டி இருக்கும் சாதகமான காலக்கட்டத்தை பயன்படுத்தி இதை செய்துமுடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினோம்.

திருக்குறளில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்ற தமிழ் ஆளுமை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவுள்ளார். முதலமைச்சராக பதவியேற்றவுடன் திருக்குறள் முற்றோதலில் மாவட்டத்திற்கு இரு மாணவர்களுக்கு மட்டுமே திருக்குறள் முற்றோதல் பரிசு என்று இருந்த நடைமுறையை மாற்றி அனைவருக்கும் அரசுச் சான்றிதழும், ரூபாய் 10,000 பரிசுத்தொகையும் என்று அறிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் திருக்குறளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதல்வரை தலைவராகவும் , முதுபெரும் தமிழறிஞரும் , திருக்குறளில் பல நூல்களைப் படைத்த ஐயா முனைவர்.இ.சுந்தரமூர்த்தி அவர்களைத் துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் (CICT) திருக்குறளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், கொண்டுவரும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் வியக்கத்தக்கவை. மாண்புமிகு பிரதமரின் வாழ்த்துச்செய்தியைத் தாங்கி வரும் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் யுனெசுக்கோ பன்னாட்டு பரப்புரைக்கு முக்கியமான செயல். செல்லும் கூட்டங்களில் எல்லாம் தமிழர்கள் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உள்நாட்டிலும் , வெளிநாடுகளிலும் திருக்குறளை இந்தியாவின் அறிவுச் சொத்தாகக் கருதி, பெருமையாகக் குறிப்பிட்டு ஒரு திருக்குறளையாவது மேற்கோள் காட்டும் இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோதி அவர்கள் யுனெசுக்கோவிற்கு கோரிக்கை வைக்கும் தலைமைப்பொறுப்பில் உள்ளார். யுனெசுக்கோவில் பல ஆண்டு காலம் இயக்குநராகவும் , பல பொறுப்புகளையும் வகித்து பிரதமர் அவர்கள் குசராத்து முதல்வராக இருந்தபோது அவரின் மாநிலத்தின் சில கோரிக்கைகளை யுனெசுக்கோவில் நிறைவேற்றி அவருக்கு நன்கு அறிமுகமான மொரீசியசு மேனாள் கல்வியமைச்சர் முனைவர்.ஆறுமுகம் பரசுராமன் திருக்குறளில் ஆழ்ந்த பற்றாளராகவும், ஆர்வலராகவும் உள்ளார். திருக்குறளை ஆழ்ந்து புரிந்துகொண்ட பல்வேறு ஆளுமைகள் முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள இந்த முக்கிய காலக்கட்டத்தில் அரசியல் எல்லைகளைக் கடந்து உலக சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு , உலக அமைதிக்கு திருக்குறளை தேசிய நூலாகவும், யுனெசுக்கோவில் இந்திய அரசு முன்வைக்க வேண்டிய நான்கு கோரிக்கைகளையும் உள்ளடக்கி ஆவணப்படுத்தி தலைமைச்செயலருக்கு வழங்கினோம்.

இந்தியா யோகாவை இந்தியாவின் கொடையாக உலக சமூகத்தின் உடல்நலத்திற்கு கொண்டுசென்றதைப்போன்று , திருக்குறளை உலக மக்களின் அமைதிக்கான, வாழ்வியல் மேம்பாட்டுக்கான ஒரு நூலாக கொண்டுசேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை பன்னாட்டுப் பார்வையில் செய்துமுடிக்கும் தொடர்புகளும், ஆளுமைத்திறனும்  ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து நிதி ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

அதில் யுனெசுக்கோவில் வைக்க வேண்டிய குழு அடையாளம் கண்டுள்ள கோரிக்கைகள்.

1. திருவள்ளுவர் சிலையை யுனெசுக்கோ வளாகத்தில் நிறுவுதல்.
2. திருக்குறள் பெயரில் ஆண்டுதோறும் ஒரு உயர்ந்த விருது , பணமுடிப்பு, பரிசு வழங்குதல்.
3. யுனெசுக்கோ சட்ட திட்டத்தை ஒட்டி அதில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி திருக்குறளை “Literary Heritage of Mankind” என்று அறிவித்தல்.
4. யுனெசுக்கோவின் 215வது கூட்டத்தில் திருவள்ளுவரின் 2055வது பிறந்த நாளை உலகப் பரப்புரைக்கு பயன்படுத்தி உலகெங்கும் யுனெசுக்கோ நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல்.

ஆகிய நான்கு நடைமுறைக்கு உகந்த கோரிக்கைகளை பல கட்ட ஆய்வுக்குப்பின் வகுத்துள்ளதை கையளித்தோம்.

தலைமைச் செயலர் அவர்கள் எங்கள் கருத்துகளை ஏற்று, இதுகுறித்து விவாதிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்வதாகக் கூறியதோடு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை குறித்தும் குறிப்பிட்டார். நல்லது நடக்கும். திருக்குறள் தேசிய நூலாகவும் , உலக அளவில் யுனெசுகோவின் ஏற்புதனையும் பெறவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரையும் சந்திப்போம் , அனைவரும் கைகோத்து செய்துமுடிப்போம்.

ஊர் கூடி தேரிழுக்கும் பணி. பல நாடுகள் ஆதரவு வேண்டும், பல நாடுகளின் பல்கலைக்கழகங்களின் பரிந்துரைகள் பெறவேண்டும்,  130க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒப்புதல் பெற , அதிகாரிகள் மட்டத்தில் அந்தந்த நாடுகளின் மொழிபெயர்ப்பை, ஆங்கில  திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்று பல்வேறு திசைகளில் பங்களிக்க உலகத்தமிழர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

விரைவில் பல்வேறு குழுக்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு வரும்.

அனைவரும் கைகோர்த்து செய்துமுடிப்போம்.

“Thirukkural for UNESCO” குழு சார்பாக
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
திரு.சி.இராஜேந்திரன், Voice of Valluvar
www.ThirukkuralForUNESCO.org

News Link: https://www.valaitamil.com/TFU-Team-meet-with-CS_20243.html

Details

Date:
September 21, 2021
Time:
7:00 pm - 10:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India