நேற்று 26/02/2023 வாணுவம்பேட்டை, திருவள்ளுவர் இலக்கிய மன்றம் 48 ஆம் ஆண்டு நிகழ்வில் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் ஆற்றிய அருமைய உரை
பேராசிரியர்.அரங்க இராமலிங்கம் அவர்களின் சிறப்புரை அருமை. வயிற்றுக்கு விருந்து என்றால் நான்கு கறிகள் வைப்பது, மரபு. இவர் செவி விருந்தில், நான்கு நெறியைச் சமைத்துக் கொடுத்தார். அந்த 4 நெறிகள்; 1. பொய்தீர் ஒழுக்க நெறி(கு.எண்:6), 2. யாதொன்றுங் கொல்லாமைச் சூழும் நெறி(324), 3. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி(477) 4. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி ஆகியவற்றை, சுவை பட பரிமாறினார்.
அதுபோல, திரு.சி.இராஜேந்திரன், I.R.S., அவர்கள் ‘ புதியதோர் உலகம் செய்வோம்’ என பாரதிதாசனின் வரிகளை எடுத்து, அந்த உலகத்தில், என்னென்ன அறங்கள் அமைய வேண்டுமென, வள்ளுவ அறங்களைச் சொன்ன பாங்கு அழகாயிருந்தது. நாடு அதிகாரத்தில் அத்தனை இலக்கணங்களும், முக்கியமாக தள்ளா வினையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது, உறுபசியும், ஓவாப்பிணியும், செறுபகையும் சேராதியல்வது, ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை உள்ளது, கண்ணோட்டம், கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை, பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்ற கருத்து, இவற்றையெல்லாம் கொண்ட புதியதோர் உலகம் செய்தால்……
என அதை சற்றே நிதானித்து,
அமைவது கடினம், ஆனாலும் நம்பிக்கை வைப்போம் என்று, மற்றொரு சுவையான விருந்தைக் கொடுத்தார்.
மொத்தத்தில், ஒரு நல்ல இலக்கியச் சுவையைச் சுவைத்தோம்.
முன்னால் மன்றத் தலைவர், திரு.கோ.பா., ஊனுடம்பு இல்லையெனினும், இந்த விழாவை, சிறப்புற நடத்திய பெருமை, மன்ற செயலாளர் திரு.முனைவர்.இராம.குருநாதன், கௌரவத் தலைவர்.கவிஞர்.புதுவயல்.செல்லப்பன், மற்றும் களப்பணி ஆற்றி வருகிற பொருளாளர் திரு.பா.இராஜமன்னார், திரு.இல.ஜனார்த்தனன் இவர்களையேச் சாரும்.
அதுமட்டுமல்ல, வழக்கம் போலவே, திருக்குறள் போட்டிகளுக்கு, தங்கள் மாணவர்களை ஊக்குவித்து, பயிற்சி கொடுத்து, அதிக பரிசுகளை வென்றதோடு அல்லாமல், இட வசதியையும் அளித்த ஆதம்பாக்கம் D.A.V. பள்ளியின் தற்போதைய தாளாளர் திரு. V.இராஜேந்திரன் அவர்களின் சேவை போற்றுதற்குரியது.