செங்கோட்டை ஸ்ரீராம் என்பவர் பகிர்ந்து கொண்டதை ,நண்பர் ஸ்ரீகுமார் வள்ளுவர் குரல் குடும்பத்தில் பகிர்ந்து கொண்டார்
இது ஆய்க்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு
படித்துப் பார்த்தேன் .மிகவும் அற்புதமாக இருந்தது
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற மூன்றிலும் இருந்து சொற்றொடர்களை எடுத்து சுவாமிகள் இறைவனுக்கு அர்ப்பணித்துள்ளார்
கடையநல்லூரின் அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த இந்த சுவாமிகள் பற்றி நண்பர்கள் ஏதேனும் குறிப்பிட்டால் நன்று
திருக்குறள் அர்ச்சனை 108
ஶ்ரீ பிரும்மானந்த தீர்த்த ஸ்வாமிகள்
பூர்வாஸ்ரமத்தில் VS மணி அய்யர் என்ற
ஶ்ரீ கௌஸ்துபமணி , கிருஷ்ணாபுரம்
அகர முதலஎழுத்துஆனாய் போற்றி!
ஆதிபகவன் அருந்தாள்போற்றி!’
வேண்டுதல் வேண்டாமை இலாயடி போற்றி
இருள் சேர் இருவினை இல்லாய் போற்றி!
தனக்குவமை இல்லாத் தனித்தாள் போற்றி!
அறவாழி அந்தண! நின்தாள் போற்றி!
எண்குணக் கடலாம் இறைவா! போற்றி!
மலர்மிசை ஏகு நின் மாணடி போற்றி!
பிறவிக் கடல் கெடுத்தருள்வாய் போற்றி!
பொறிவாயில் ஐந்தவி பொருளே போற்றி!
செந்தண்மை பூண்டு ஒழுக செல்வா போற்றி!
துறந்தார் விருமபும் துணையானாய்போற்றி
அறத்தின் உருவே! அன்பே போற்றி
அன்பின் வழிநிலை நின்றாய் போற்றி!
எழுமைக் குந் துணையானாய் போற்றி!
சமன்செய்து சீர்தூக்கும் கோலே போற்றி!
சொற்கோட்ட மில்லாச் சுரனே போற்றி!
அகழ்வாரைத் தாங்குநிலம் ஆனாய் போற்றி!
அறிவினுள் எல்லாம் அறிவே போற்றி!
கைம்மாறு வேண்டாக் கடவுளே போற்றி!
ஒன்ற உலகத்து உயர்புகழ் போற்றி!
அருட்செல் வந்தனை அருள்வாய் போற்றி!
அருள்சேர் நெஞ்சர்க் கருள்வாய் போற்றி!
எவ்வுயி ருந்தொழும் இறையே போற்றி!
தீமை யிலாத செயலாய் போற்றி!
உலகுயிர்க் குயிராய் உறைவாய்ப் போற்றி!
புரைதீர் நன்மைப் புலவர் போற்றி!.
பகுத்துப் பல்லுயிர் காப்பாய் போற்றி
இன்னாசெய்தாரையும் எடுப்பாய் போற்றி!
நிலையாய் ஒளிரும் நிமலா போற்றி!
பற்றற் றவர்பிறப் பறுப்பாய் போற்றி!
பற்றுவிடப் பற்றும் பரமனே போற்றி!
செருக்கறு தவர்க்கருள் செல்வா போற்றி!
மற்றீண்டு வாரா வகைசெய்வாய் போற்றி!
பிறப்பெனும் பேதைமை நீக்குவாய் போற்றி!
அவாவினை அறுக்கும் அருளே போற்றி!
இன்பம் இடையறாது ஈவாய் போற்றி!
பேரா இயற்கை தருவாய் போற்றி!
ஊழின் பெருவலி ஆனாய் போற்றி!
இருள்நீக்கி இன்பம் ஈவாய் போற்றி!
மருள்நீக்கி மெய்யுணர்வு அளிப்பாய் போற்றி!இன்சொலால் ஈத்தளி இறைவா போற்றி!
முறைசெய்து காக்கும் முதல்வா போற்றி!
மீக்கூறும் மன்னர்க் கொளியே போற்றி!
வாழும் உயிர்க்கண் ணானாய் போற்றி!’
கற்றர் காமுறும் கனியே போற்றி!
கேடில் விழ்ப்பொரு ளானாய் போற்றி!
உலகின் புறக்கண்டு வப்பாய் போற்றி!
நுணங்கிய கேள்வியர் நுவல்வாய் போற்றி!
ஒற்கத்தின் ஊற்றாம் துணையே போற்றி!
ஆவ தறியும் அண்ணல் போற்றி!
எல்லாம் உடைய இறையே போற்றி!
எப்பொருட் கும்மெய்ப் பொருளே போற்றி!
தினைத்துணைக் குற்றமும் தீண்டாய் போற்றி!
பெரியாரைப் பேணும் பெரியாய்ப் போற்றி!
அரியவற்றுளெலாம் அரியாய் போற்றி!
நல்லார் தொடர்பு நயந்தாய் போற்ற!
மனந்தூ யார்க்குமன எச்சமே போற்றி!
அழிவதும் ஆவதும் ஆக்குவாய் போற்றி!
சான்றோர்க் குத்துணை வலியே போற்றி!
ஊக்க முடையார்க் கூக்கமே போற்றி!
அறம்பொருள் இன்பம் ஆனாய் போற்றி!
குணகுற் றங்களை ஆய்வாய் போற்றி!
பெருமை சிறுமையை அறிவாய் போற்றி!
தீரா இடும்பை தீர்ப்பாய் போற்றி!
நாடி நலம்புரி நல்லாய் போற்றி!
அன்பறிவு தேற்றம் ஆனாய் போற்றி!
பழமைபா ராட்டும் பண்பே போற்றி!
அரியதாம் பெருவலி ஆனாய் போற்றி!
அந்தணர் நூற்கும் ஆதியே போற்றி!
கண்ணோட்ட முடைய கண்ணியா போற்றி!
எல்லார்க்கும் வேண்டுவ ஈவாய் போற்றி!
உள்ளுவ துயர்வுறும் உரவோய் போற்றி!
ஊழையும் அகற்றும் உரவே போற்றி!
முயற்சி திருவினை ஆக்குவாய் போற்றி!
இடும்பைக்கு இடும்பை படுப்பாய் போற்றி!
வினைநலம் உடையார் வேண்டுவாய் போற்றி!
சொல்லிய வணம்செய் தூயாய் போற்றி!
எண்ணிய எண்ணியாங் கியற்றுவாய் போற்றி!
நட்டார்க்கு நல்லது நயப்பாய் போற்றி!
ஐயப் படாதகம் அறிவாய் போற்றி!
உவப்பினும் காயினும் உறுதுணை போற்றி!
கற்றாருள் கற்ற காவல போற்றி!.
உறுபசி முதலிய ஒழிப்பாய் போற்றி!
பொருளல் லவரையும் புரப்பாய் போற்றி!
எண்ணிரு ளளிக்கும் விளக்கே போற்றி!
திறனறிந் தனைத்தும் செய்வாய் போற்றி!
அருளும் அன்பும் ஆனாய் போற்றி!
அழிவினை நீக்கியா றுய்ப்பாய் போற்றி!
உடுக்கை இழந்தவன் கையே போற்றி!
இகலெனும் துன்பம் துடைப்பாய் போற்றி!
தன்துணை யாம்இன் துணையே போற்றி!
உட்பகை தன்னை ஒழிப்பாய் போற்றி!
குன்றின் அனைய குணத்தாய் போற்றி!
பெருமை யுடைய பெரியாய் போற்றி!
இன்னாசெய் தார்க்கும் இனியவ போற்றி!
ஊழி பெயரினும் பெயராய் போற்றி!
சீருடைச் செல்வச் செம்பொருள் போற்றி!
குடிசெய் வார்க்கருள் குணனே போற்றி!
எல்லாம் தொழும்படி யிருப்பாய் போற்றி!
பலகுடை நிழல்பில் பரனே போற்றி!
நற்பொருள் நண்குணர்ந்து நல்குவாய், போற்றி!
நோயும் மருந்தும் ஆனாய் போற்றி!
உடம்போ டுயிரென உறைவாய் போற்றி!
கருமணிப் பாவைபோல் கலந்தாய் போற்றி!
இறைப்பவர்க் கூற்றுநீர் ஆறாய் போற்றி!
காமக் கடல்கடத் தேமமே போற்றி!
மன்னுயிர் அனைத்தும் அளித்தாய் போற்றி!
23/9/1991
கல்வெட்டு
ஸ்ரீ வேம்பையர் சாஸ்வத தர்மசாஸனம்
கிருஷ்ணாபுரம் ,கடையநல்லூர்
போஷகர் ஸ்ரீ பிரம்மானந்த தீர்த்த சுவாமிகள் மேனேஜிங் டிரஸ்டி ஸ்ரீ VS வேம்பன்
தொகுப்பு
சி இராஜேந்திரன்
23/12/2022