Skip to content

வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்

  • by

திருக்குறள் நூல் அறிவோம்
திரு. கருணாமூர்த்தி அவர்களின் முகநூல் பதிவு.

“மலர் நீட்டம்.”
முனைவர் சிலம்பொலி .சு. செல்லப்பன்
பாரதி பதிப்பகம் .
முதல் பதிப்பு 2003 .
விலை ரூபாய் 40
மொத்த பக்கங்கள் 135.

வான்புகழ் கொண்ட வள்ளுவன் வழங்கிய திருக்குறள் குறித்து பல அறிஞர்கள் பல விதமாக விவரித்து எழுதிய கட்டுரைகள் படிக்க படிக்க இனிக்கும்.நான் எனது இளம் வயதிலேயே கைபிடித்து நடக்க தொடங்கிய டாக்டர் மு வரதராசனார் அவர்கள் எழுதிய திருக்குறள் சம்பந்தமான எல்லா புத்தகங்களையும் படித்து இருக்கிறேன் .அவர் திருக்குறள் குறித்து எழுதாமல் எந்த நாவலையும் எந்த கட்டுரையும் எழுதியதாக எனக்கு நினைவில்லை .இந்த மலர் நீட்டம் புத்தகம் திருக்குறள் குறித்து பல விதங்களில் பல மேற்கோள்காட்டி சங்க இலக்கியங்களை எல்லாம் மேற்கோள்காட்டி எழுதப்பட்டிருக்கிறது .குளத்தில் தண்ணீர் இருக்கிறது .அதன் நிலையிலேயே மலர் தலை காட்டி இருக்கிறது .நீருக்கு அடியில் வேர்இருக்கிறது; தண்டும் இருக்கிறது .நீரின் அளவு குறைய குறைய அல்லது நீரின் அளவு அதிகரிக்கப்பட அளவிலோ மலரின் அழகு முகம் நமக்கு உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படும்.அதுபோலவே சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் அறிவு குளத்தில் திருக்குறள் மலர் தென்படுகிறது .நாமும் நமது அறிவுக் கண் திறந்து அதிலேயே மூழ்கினால் நமக்கும் அந்த திருக்குறள் வளர உயரம் சற்று நீட்டப்பட்டு விடும் என்கிற அளவிலேயே இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

#####
ஆசிரியர் குறிப்பு.

முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் குறித்து தமிழ் அறிந்தவர்கள் , சிலப்பதிகாரம் படித்தவர்கள் அறியாமல் இருக்க முடியாது .சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஆங்கிலத்துடன் அருந்தமிழ் கற்ற அறிஞர் ;தமிழ் ஆர்வலர் ;தமிழ்த் தொண்டர் ; தழீஇய பண்பாளர்.

#####
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் :
இந்த புத்தகத்தில் மொத்தம் பனிரெண்டு கட்டுரைகள் எழுதப்பட்டு இருக்கிறது. அத்தனையும் தூத்துக்குடி முத்துக்கள்.
1) குளமும் குறளும்.
2) வானும் வள்ளுவமும்.
3) தலைமுடியும் தமிழ் மறையும் .
4)முகமும் முப்பாலும்.
5) மரமும் மணிக்குறளும்.
6)புள்ளும் பொய்யா மொழியும் .
7) அமிழ்தும் அருங் குறளும்.
8)செய்யும் செந்நாப்போதாரும்.
9)விளக்கும் விரி குறளும்.
10) வாளும் வள்ளுவரும் .
11)தீயும் திருக்குறளும்.
12) தேரும் திருக்குறளும்.
என்று மொத்தம் 12 குறட்பா கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது.

மலர் நீட்டம் குளத்தின் வெள்ளத்தை அளந்து காட்டியதைப் போல இந்த நூல் திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறியை அறிய துணை செய்கிறது .திருவள்ளுவர் உலகியல் உவமையாகக் கொண்டு உணர்த்திய அறநெறிகளை விளக்கும் வகையில் எழுதப் பெற்றுள்ளது .”குளமும் குறளும்” என்ற கட்டுரை தமிழ் கவிதை உலகின் சிறப்பினைப் பேசுகிறது .எடுத்துக் கூறும் செய்திகளை இனிதே விளக்க கன்பூசியஸ் பித்தகோரஸ் போன்ற அறிஞர்களின் மேற்கோள்கள் எடுத்தாள பெற்றிருக்கும் அருமை வியப்புக்குரியது ;பாராட்டுதலுக்கு உரியது.திருக்குறளே எளிய முறைகளைக் கொண்ட நூல் .அதையும் எளிமையாக்கி தர ஆசிரியர் செய்துள்ள முயற்சி உண்மையிலேயே வியப்பளிக்கிறது.”மனத்தது மாசாக “…என்ற திருக்குறளை விளக்க எடுத்துக்காட்டாக வரும் ” கள் பானை “சிரிக்க வைக்கிறது .;சிந்தனையையும் தொடுகிறது .

தீயும் திருக்குறளும், தேரும் திருக்குறளும் பல தடவை படித்து உணர வேண்டிய தத்துவ கட்டுரைகள் .தேருக்குரிய அச்சாணியை வள்ளுவர் இன்றியமையாமைக்கே காட்டினார் .ஆனால் ஆசிரியர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் திருவள்ளுவர் வழியில் மேலும் தம் சிந்தனையை விரிவாக்கி ,அச்சாணியில் அழுக்கை ஏற்றி , அழுக்குக்காக கூசாது பனியில் நிற்ககும் உறுதியை எடுத்துக் காட்டுவது சிறந்த விளக்கம்.

“தேரும் திருக்குறளும்” கட்டுரையைப் படித்துவிட்டு மிகவும் நெகிழ்ந்து போனேன்.; மகிழ்ந்துபோனேன், சற்று நேரம் என்னையே மறந்து போனேன்.
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம் இது