மு.சீ. வெங்கடாசலம் (1934)
திருச்சியில் வாழ்ந்த மிகச் சிறந்த மூத்த வழக்கறிஞர். தமிழ்ப் புலமை மிக்கவர். திருக்குறளைப் பற்றி ஆய்வு நோக்கத்துடன் கட்டுரை எழுதியவர். திருமதி ருக்குமணி திரு கே. சீனிவாசன் இணையரின் மகனாக திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் முருகப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் வெங்கடாசலம். துறையூர் ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளி, செங்கற்பட்டு மாவட்டம் ஆத்தூர் ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் தங்கி அங்கிருந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து திருச்சி தேசியக் கல்லூரியில் இளங்கலை (1950-1954), தூய வளனார் கல்லூரியில் முதுகலை (1954 56) 1962 – 64 சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டவியல் பயின்றவர்.
1956 முதல் அரசியலில் முழு நேரம் ஈடுபட்டார். ஆறு முறை சிறைவாசம் சென்றவர். அண்ணாவுடன் நட்பு பாராட்டியவர். அண்ணா தொடங்கிய ஓம் லேண்ட் ஆங்கில வார இதழின் துணை ஆசிரியர். திராவிடநாடு இதழின் துணை ஆசிரியர். மொழிபெயர்ப்பு நூல்கள் 10 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பாவேந்தரின் குடும்ப விளக்கு, இருண்ட வீடு ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியன தமிழகம் அறிய வேண்டுவன. குறிப்பாக 1992 சோசியோ பொலிட்டிக்கல் பிலாசபி ஆப் திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் மொழிபெயர்ப்பு கம்பராமாயணச் சுருக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். இந்நூலைக் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் 6-8- 2003 இல் வெளியிட்டார். இவையன்றி சர் ஆர்க்காடு இராமசாமி முதலியார் தொடங்கி ஆளுநர்கள் உஜ்ஜல் சிங், குரானா சிங், வட இந்திய முதல்வர்கள், எல். கே. அத்வானி, ஆசாரிய கிருபாளினி, ராஜ் மோகன் காந்தி என 10க்கும் மேற்பட்டோருக்கு அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
இந்தி எதிர்ப்பு தொடங்கி பிரேமானந்தா வழக்கு வரை ஐந்து இன்றியமையாத வழக்குகளை வழக்கறிஞராக இருந்து நடத்தியவர். திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றிருந்தார். திருச்சியில் உள்ள காவேரி மகளிர் கல்லூரியும், இந்திரா காந்தி மகளிர் கல்லூரியும் இவர் முயற்சியால் உருவானவை ஆகும்.