Skip to content

மு.இராகவையங்கார்

மு.இராகவையங்கார் (1878 – 02.02.1960)

இராமநாதபுரம் சதாவதானி முத்துசாமி ஐயங்காரின் திருமகனாகத் தோன்றியவர். முத்துசாமி ஐயங்கார் பாண்டித்துரைத் தேவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர். இவர் தமிழறிஞர் ரா.ராகவையங்காரின் மாமன் மகன் ஆவார்.

கம்பராமாயணப் பதிப்புக் குழு, பேரகராதிப் பதிப்பு, வரலாற்றுப் பேராசிரியர் எனப் பல நிலைகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றினார்.

தமிழ்நேசன் இதழின் சிறப்பாசிரியர். செந்தமிழ் இதழின் துணை ஆசிரியர். ஆராய்ச்சித் தொகுதி, செந்தமிழ் வளர்த்த தேவர்கள், கட்டுரை மணிகள், வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க் கவிசரிதம், இலக்கிய சாசன வழக்குகள், சேரவேந்தர் செய்யுட்கோவை, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, திருக்குறள் பரிமேலழகர் உரை, நரிவிருத்தம், சிதம்பரப் பாட்டியல், விக்கிரம சோழன் உலா, சந்திரலோகம், திருக்கலம்பகம், இரட்டைமணிமாலை போன்ற நூல்கள் இவரின் ஆய்வுப் புலமைக்கும் பதிப்புத் திறனுக்கும் சான்று பகர்வன.

தமிழ்ப் பேரகராதியை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக இருந்து 26 ஆண்டுகள் உழைத்தார். இவர் பணியைப் பாராட்டி அரசு இராவ்சாகிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட (1901) நான்காம் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக செந்தமிழ் எனும் தனித்தமிழ் இதழ் வெளிவரத் துணைநின்றார். இவ்விதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் ரா.ராகவையங்கார். இவ்விதழ்ப் பணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் மு.இராகவையங்கார். இதழின் பெரும்பான்மைப் பணி இவரையே சாரும். செந்தமிழ் இதழின் வளர்ச்சிக்கு மு.இராகவையங்கார் ஆற்றிய பணி போற்றத்தக்கப் பெரும்பணியாகும். நான்காம் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகத் தமிழ்க்கல்லூரித் தொடங்கப் பட்டது. அக்கல்லூரியில் மு.இராகவையங்கார் பணியாற்றினார்.

திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் 1945 ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சித்துறை தொடங்கப்பட்டது. இத்துறையில் முதல் பேராசிரியராகப் பொறுப்பேற்றவர் மு.இராகவையங்கார்.

ஆராய்ச்சி, இலக்கியப்படைப்பு, இலக்கணப் பணி, அகராதிப் பணி, உரையெழுதும் பணி, இதழாசிரியர் பணி என இவரின் அருந்தமிழ்ப் பணி பன்முகம் கொண்டது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995