முனைவர் மு.க. அன்வர் பாட்சா (05.07.1960)
கோயம்புத்தூரில் திரு.முகமது கௌஸ், திருமதி. மக்பூல் ஜான் இணையருக்குப் பிறந்து பயின்று வாழ்வில் உயர்ந்தவர். தன்னுடைய முயற்சியால் கற்றுத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவை எல்.பி.ஓ.ஏ., பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திருக்குறள் மேல் உள்ள ஈடுபாட்டால் நாளும் கரும்பலகையில் திருக்குறளை எழுதி அதற்குப் பொருளும் எழுதி மக்கள் பார்வைக்கு வைத்திடும் பணியை 40 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
சுய முன்னேற்றம் குறித்தும் ஆளுமைத் திறன் வளர்ப்பது குறித்தும் எழுச்சியுற சொற்பொழிவாற்றக் கூடியவர். மாணவர்கள் திருக்குறளைப் பிழையற சொல்ல ஒரு சாக்லேட் கொடுத்து ஊக்குவித்து வருபவர். திருக்குறளுக்கு எளிமை உரை எழுதியுள்ளார். (திருக்குறள் கையடக்கப் பதிப்பு விலை ரூபாய் 40).
துரு, லாசரஸ், (Rev.W.H.Drew & Rav.John Lazarus) ஆகியோரின் மொழி ஆக்கத்தையும் தம் உரையில் சேர்த்துத் திருக்குறள் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நூல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து திருக்குறள் தொடர்பாக எழுதியும் பேசியும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
செந்தமிழ்ச் செல்வன் (1981) குறள்நெறிச் செல்வன் (1995) என 28 விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது (2020) தமிழக அரசின் அகவை முதிர்வு தமிழறிஞர் (2021) ஆகியவை இவர் பெற்றவை. இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளும் நல்ல தமிழில் திருக்குறட் கருத்துக்களை மக்களிடையேயும் குறிப்பாக மாணவர்களிடையேயும் கொண்டு செல்லும் பணியைச் செய்து வருபவர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள். இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் யாரும் திருக்குறளுக்கு உரையோ தனி நூலோ எழுதவில்லையே என யான் ஏங்கியேங்கி ஏக்கத்தோடு தேடித் தேடி வருகையில் எனக்குக் கிடைத்தவர்தான் மு.க.அன்வர் பாட்சா அவர்கள். இவர் வாழ்க. இவரின் திருக்குறள் தொண்டு தொடர எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்.
“இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை”