முனைவர் க. பாலமுருகன் ஐ.ஆர்.எஸ். (28.12.1970)
திருமதி கா. பவுனம்மாள் திரு தி.வை. கருணாகரன் இணையரின் மகனாக 28-12-1970 அன்று பிறந்தவர். அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். பள்ளிக்கல்வியை தனது ஊரில் தமிழ்வழியில் கற்றவர். காரைக்குடி அழகப்பா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 1991இல் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். தனியார் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின் 1997 இல் குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய் பணியில் சேர்ந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பணி செய்துவிட்டு 2010இல் பெங்களூரு மேலாண்மை நிறுவனத்தில் பொதுப்பணி மேலாண்மையில் மேல்நிலைப் பட்டம் பெற்றார். 2019இல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பொதுப் பணி குறித்த ஆய்வு செய்துள்ளார். நெடிய பயணம், நிழற்படக் கலைகளில் ஆர்வம் உடையவர். குடிமைப்பணிகள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுவருகிறார். பல நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகளும் எடுத்துவருகிறார். இந்திய வருவாய் பணி (சுங்கம் & மத்திய கலால் வரி), உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் என இந்தியாவில் பல்வேறு பணிகளில் பணியாற்றியவர்.
திருக்குறளைத் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்துவருகிறார். பெங்களூரில் இருந்தபடி இவரது தமிழ் இலக்கியப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.