முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம் (06.04.1943)
பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் என்னும் ஊரில் திருவாளர் மு.வெங்கடாசலம்– செல்லம்மாள் ஆகியோர்க்கு மகனாக 06.04.1943 இல் பிறந்தவர்.
திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து, குடந்தை அரசுக் கல்லூரியில் புகுமுக வகுப்புக் கல்வியையும் இளங்கலைத் தமிழ் இலக்கியக் கல்வியையும் முடித்தவர்(1961-64). காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.
தஞ்சாவூர் பூண்டி திருபுட்பம் கல்லூரியில்22.06.1968இல் இளநிலை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும், 1968-70இல் வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும் பணியாற்றினார். 1970 இல் அரசுக் கல்லூரியில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பெற்று, திருவண்ணாமலை, திருச்சி பெரியார் கல்லூரி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் அமைந்த அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும், பொறுப்புப் பதிவாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
கல்வெட்டு, சமூகப்பணி, முதியோர் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ்களும் படைப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றியவர்.
இவரது நூல்கள் ஆராய்ச்சிக் கட்டுரை, கவிதை, செய்யுள் –நாடகம், சிறுகதை, இளைஞர்களுக்கான வழிகாட்டி என்ற பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன. இவர் ஒரு சீரிய இலக்கிய ஆய்வறிஞர்; சிறந்த பேச்சாளர். ஆங்கில நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பேரறிவு பெற்றவர்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதவும் பேசவும் வல்லவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பெற்றியர். திருக்குறளுக்கு உரைகண்ட பெருமகனார். வடமொழியில் உள்ள நீதி நூல்கள் அனைத்தையும் ஒப்பிட்டு பாண்டுரங்கவாமன் காணே என்ற மராட்டியப் பேரறிஞர் தர்ம சாஸ்திரத்தின் வரலாறு என்றொரு நூல் எழுதினார். அதனைத் தழுவி ‘திருக்குறளும் ஏனைய இந்திய அறநூல்களும்’ என்று இவர் எழுதிய பெருநூலைச் (மூன்று தொகுதிகள்) செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பல கல்விநிறுவனங்களின் பாடநூல் குழுக்களிலும் தேர்வுக் குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள், கவியரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று வருகின்றார். அனைத்து இந்திய வானொலியில் முப்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள், வாழ்த்துரைகள் நிகழ்த்திய பெருமைக்குரியவர்.
இலக்கியப்பணி, கல்விப்பணி ஆகியவை தவிர, பேராசிரியர் கு.வெ.பாலசுப்பி்ரமணியன் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியத் தலைவர்கள் மற்றும் நடுவண் அரசு அலுவலர்களுக்குத் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதுமொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். 16 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 24 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் நெறியாளராகச் செயல்பட்டுள்ளார்.
சங்க இலக்கியத்தில் புறப்பொருள், சங்க இலக்கியத்தில் வாகைத்திணை, சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், ஆய்வுக்களங்கள், சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய நிழல், கலம்பகத் திறன், தமிழ் வீரநிலைக் கவிதை (2006 முனைவர் க. கைலாசபதியின் முனைவர் பட்ட ஆய்வேடு மொழிபெயர்ப்பு), நிலாக்கால நினைவுகள்(கவிதைகள்), துண்டு, (சிறுகதை), நரசிம்மம் (சிறுகதை), தாயத்து (சிறுகதை), வண்டார்குழலி (காப்பியம்) தமிழக அரசின் பரிசு பெற்றது, கயற்கண்ணி(நாடகம்), இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, தினமும் ஒரு தேவாரம், சைவ சித்தாந்த அடிப்படைகள், சிற்ப ரத்னாகரம், காவிரி தமிழகத்தின் உயிரோட்டம், அருணகிரியார், திருக்குறள் பேரொளி முதலான படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூரில் தமிழ் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்.