மறைமலையடிகள் (15.07.1876 – 15.09.1950)
மறைமலையடிகளாரின் இயற்பெயர் வேதாசலம். நாகப்பட்டினம் அருகே காடம்பாடி என்ற கிராமத்தில் பிறந்தவர். சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மாவிற்கும் மகனாகப் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம், வடமொழியில் புலமை பெற்றவர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் 1898 – 1911 வரை 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவருடைய மாணவர்களில் செங்கல்வராய பிள்ளை, டி.கே.சி., சோமசுந்தர பாரதி, எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனது 35 வயதில் பணியிலிருந்து விலகினார்.
1911 முதல் தன்னைச் சமரச சன்மார்க்க குருபோதராக அறிவித்துக் கொண்டு சைவப் பணி ஆற்றினார். வாழ்நாள் முழுமையும் சைவப்பணி, தமிழ்ப்பணி எனத் தொண்டாற்றினார். இலங்கை சென்று தமிழையும் சைவத்தையும் வளர்த்தார்.
இவர் சேர்த்து வைத்திருந்த நூலகத்தில் (1914) 4000 நூல்களைப் பொது மக்களுக்கு (மறைமலையடிகள் நூல் நிலையம்) உரிமையாக்கினார். 1916 இல் தனித்தமிழ் இயக்கம் கண்டவர். தமிழக அரசு இவர் பெயரால் விருதொன்றினை வழங்கி வருகிறது.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி (1903), பட்டினப்பாலை ஆராய்ச்சி (1906), தொலைவில் உணர்தல் (1935), மரணத்தின் பின் மனிதர் நிலை (1937), நூறாண்டு வாழ்வது எப்படி, மாணிக்கவாசகர் காலமும் வரலாறும் என முப்பது நூல்கள் இவரால் எழுதப்பெற்றுள்ளன.
கல்லூரி ஆசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், துறவி, தனித்தமிழ் இயக்கம் கண்ட தலைவர் எனப் பன்முக ஆளுமைக்குரியவர்.