மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு.வ.இலட்சுமி அம்மணி (1894 – 1971)
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரி. இது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டது. இத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர். இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்து, அந்தப் புலியைக் குத்திக் கொன்றதால், புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமையோடு அழைத்துவருகின்றனர். மக்கள் நலன், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது.
இவர் 1894-ல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால், பொருட்பால் என இரு பால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார். காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். இவர் காலத்தில் தமிழுடன் வடமொழி இரண்டறக் கலந்திருந்ததால் உரை நூல் முழுதும் சமஸ்கிருதத்தின் தாக்கம் நிரம்பியுள்ளது.
அணிந்துரைக்காகப் பலருக்கும் புத்தகம் அனுப்பி, அறிஞர்கள் எழுதித் தந்ததற்குப் பிறகே இந்த உரை நூல் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1928-ல் தொடங்கி 1929-ல் பணி நிறைவடைந்துள்ளது. சுமார் 4, 5 மாதங்கள் லட்சுமி அம்மணி இப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம். 1929 இல் வாழ்ந்த தமிழறிஞர்களான உ.வே.சா, திரு.வி.க., நா.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை உமாமகேசுவரனார், திரு.வி.க. உள்ளிட்ட 29 அறிஞர்களிடம் பெற்ற வாழ்த்துரையும் அணிந்துரையும் இந்த நூலை அழகு செய்கின்றன.