பேராசிரியர் வ. சுப. மாணிக்கம் (17.04.1917 – 25.04.1989)
வ.சுப.மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், வ.சுப்பிரமணியன் செட்டியார் – தெய்வானை ஆச்சி அவர்களுக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இளமையில் பர்மா, இலங்கை ஆகிய அயல்நாடுகளில் பணிபுரிந்தார். பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் தொடர்பால் தமிழ் கற்று வித்துவான் படிப்பில் தேறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகச் சிறக்கப் பணியாற்றியவர்.
பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் எனும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழங்கால்பட்டவர். திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் நுண்மாண்நுழைபுலம் மிக்கவர்.
அடக்கமானவர், அமைதியானவர், தமிழ்ப் பேராசான், தமிழ்க்கொள்கைச் சான்றோர் என இவரைப் போற்றுவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் (1979-1982) சிறக்கப் பணியாற்றியவர். இவர் துணைவேந்தராக இருந்த காலத்தில்தான் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு (1981) மதுரையில் நடைபெற்றது. மாநாட்டு ஆய்வுக் கருத்தரங்குகள் அனைத்தும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தமிழ்க் காதல், வள்ளுவம் (1983), திருக்குறட்சுடர் (1987), திருக்குறள் தெளிவுரை (1991), தொல்காப்பியப் புதுமை, கொடை விளக்கு, எந்தச் சிலம்பு, சிந்தனைக் களங்கள், இலக்கிய விளக்கம், ஒப்பியல் நோக்கு, கம்பர், நெல்லிக்கனி முதலான இருபத்து எட்டு நூல்களை எழுதியவர். இவருடைய இரட்டைக் காப்பியங்கள் என்ற பதிப்பு அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பிய ஆய்வை மேற்கொண்டவர்.
தமிழ் அறிஞராகவும் உரையாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் கவிஞராகவும் பேராசிரியராகவும் விளங்கியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு டாக்டர் பட்டம் (D.Lit.,) வழங்கிப் பெருமையளித்தது. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருதினை இவர் மறைவுக்குப் பின்னர் வழங்கிச் சிறப்பித்தது.