பேராசிரியர் மு. வரதராசனார் (25.04.1912 – 10.10.1974)
திருமதி அம்மாக்கண்ணு, திரு முனுசாமி முதலியார் இணையருக்கு 25-04-1912 அன்று வடஆர்க்காடு மாவட்டம் அம்மூர் அருகிலுள்ள வேலம் என்னும் சிற்றூரில் பிறந்தார். திருப்பத்தூரில் உயர்நிலைப்பள்ளியிலும் பிறகு சிறிதுகாலம் வட்ட அலுவலகத்தில் எழுத்தராகப் பணி செய்தார். முருகேச முதலியாரிடம் தமிழ் பயின்றார். 1935இல் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்றார். 1939இல் பச்சையப்பன் கல்லூரியில் பயிற்றுநராக நுழைந்தார். முதுகலை பட்டத்தைத் தனித்தேர்வராக எழுதியவர். பி.ஓ.எல். தேர்ச்சியை முதுகலைக்கு நிகராக ஏற்க மறுப்பு எழுந்ததை மாற்றி ஏற்கச் செய்தார். 1950இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுநிலை படிப்புகளுக்கு வழிசெய்தார்.
1939இல் குழந்தைப்பாடல்கள் தொடங்கி 1974 வரை 84 நூல்கள் எழுதியுள்ளார். அதில் 13 புதினங்கள். இந்நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கைவிளக்கம் (1948), திருக்குறள் தெளிவுரை (1949), குறள்காட்டும் காதலர் (1968) ஆகியன திருக்குறள் பற்றிய மு.வ.வின் நூல்கள் ஆகும். மு.வ. அவர்கள் திருக்குறள் பற்றி இருபத்து மூன்று (23) கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை அவரது நூற்றாண்டு விழாவையொட்டி தொகுக்கப் பெற்ற ‘மு.வ. கட்டுரைக்களஞ்சியம்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் வருமாறு:-
- உரிமை நூல் – பரிதிமாற் கலைஞர் நூற்றாண்டு விழாமலர் 1970.
- திருக்குறளில் சங்க இலக்கிய மணம் – செந்தமிழ்ச்செல்விஏப்ரல் 1954.
- ஒப்புரவு – செந்தமிழ்ச் செல்வி, திங்கள் வெளியீடு 1947.
- திருக்குறளில் காதல் – ஸ்ரீராமகிருஷ்ண வித்தியாலயா வெளியிட்ட திருக்குறள், பதிப்பாசிரியர், கி.வ.ஜ.1963.
- சங்கப்பாக்களும் திருக்குறளும் – கலைமகள் தீபாவளிமலர் 1974.
- திருவள்ளுவர் திருவுருவப்பட வெளியீட்டுவிழா – திருவள்ளுவர் திருவுருவப்பட வெளியீட்டு விழாமலர்.
- வாய்ச்சொற்கள் ஏன் – தினமணிகதிர், தீபாவளிமலர் 1969.
- ஒருபுரட்சி – சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் திருவள்ளுர் திருநாள் விழாமலர், 15-10-1968
- திருக்குறளின் கவிப்பண்பு – தமிழ்உறவு, ஆண்டுமலர் 1968
- 10.அறிவிற்சிறந்தமக்கள் – மாணவர்மன்றம், நித்திலக்குவியல் 1974
- 11.வள்ளுவரும் குடிமையும் – வள்ளுவர் வாக்கு, வெள்ளிவிழாமலர் 1952
- 12.திருக்குறளில் இலக்கியஆராய்ச்சி – கலைமகள் தீபாவளிமலர் 1970
- 13.திருவள்ளுவரும் பொதுமையும் – திரு. வி. க. மணிமடல் 1943
- 14.வள்ளுவர்கண்ட அரசியல் : அன்றும்இன்றும் – மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் 1974
- 15.அறத்தின் தாயகம் – முல்லை முத்தையா, திருக்குறள் பெருமை 1959
- 16.ஒருசிறு காட்சி – சிங்கப்பூர், தமிழ்முரசு 9-8-1953.
- 17.திருவள்ளுவரும் திருக்குறளும் – கலைக்கதிர் 1960
- 18.உருவும் கருவும் – முத்தாரம்மே 1962
- 19.உழவர் மாநாடு – கலைக்கதிர், சனவரி 1957
- 20.நந்தா விளக்கு – திருவள்ளுவர் 2000 ஆண்டுமலர், சனவரி 1969
- 21.உறுதி நூல்
- 22.உலகினுக்கே தருவோம்
- 23.நாடு
இக்கட்டுரைகள் திருக்குறள் என்னும் ஒரு நூலை அடிப்படையாகக்கொண்டு அதன் பல்வேறு பொருண்மைகளைப் பல்வேறு கோணங்களில் காட்டுகின்றன. திருக்குறளை உரைநடையில் எளிதாகப் படிப்பது போன்ற உணர்வைக் இக்கட்டுரைகள் ஏற்படுத்துகின்றன.
இவர் எழுதிய திருக்குறள் தெளிவுரை 1949ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்தது. 2022 ஆம் ஆண்டு 502ஆவது பதிப்பு வெளிவந்துள்ளது. இந்நூலின் பதிப்புரிமையை 1949ஆம் ஆண்டே தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திற்குக் கொடுத்துவிட்டார். பல இலட்சம் பிரதிகள் விற்பனையான இந்த நூலின் வருமானம் கழகத்தாருக்கே உரியது. இந்த விற்பனையில் டாக்டர் மு.வ. அவர்களுக்கோ, அவரது குடும்பத்திற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. இதனை அறியாத சிலர் இன்றும் பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.வ. அவர்களைப் பற்றித் தவறாக எழுதுவது, எழுதியவரின் அறியாமையையே புலப்படுத்துகிறது.
மாணவர்களுக்குப் பாடநூலாக இருந்த, மொழி வரலாறு, மொழி நூல், The Treatment of Nature in Sangam Literature (English) ஆகிய இம் மூன்று நூல்களின் விற்பனை வருமானம் (Royalty) கழகத்தாருக்கே உரியது. பேராசிரியர் டாக்டர் மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஏறத்தாழ முப்பது பதிப்புகளைத் தாண்டியுள்ளது. இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தமிழ் நெஞ்சம், பழியும் பாவமும் ஆகிய நான்கு நூல்களின் வருவாயினைச் சென்னை, ஷெனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க.மேனிலைப்பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு அளித்துள்ளார். இன்றும் அந்நூல்களின் வருவாய்த் தொகை அப்பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் அல்லி, பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை ஆகிய இரண்டு நூல்களின் வருமானம் பாரி நிலையத்தார்க்கு உரியதாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேராசிரியர் டாக்டர் மு.வ.அவர்கள், வாழும்போது பலமாணவர்களுக்குப் பொருளுதவி அளித்தும் பல நிறுவனங்களுக்குத் தம் நூலினுடைய வருவாயை அளித்தும் உதவிய பெருந்தகையாவார்.
பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்கள் மறைந்த 48 ஆண்டுகள் கடந்தும் அவரைப் பற்றித் தவறாக எழுதும் பண்பற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்கள் மறைந்தபின்னர் அவரைப் பற்றி 65 நூல்கள் வெளிவந்துள்ளன. இப்படி எந்தப் பேராசிரியருக்கும் ஏன் எந்தத் தலைவருக்கும்கூட அவர்களது மறைவுக்குப்பின் இத்தனை நூல்கள் வெளிவந்ததில்லை. (காண்க: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை)
சங்கப்பாடல்கள் தொடர்பான கட்டுரைகள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டின. இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் நீங்கா இடம் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர். மு.வ. என்ற இரண்டெழுத்து பல விரிவுகளை உடையதாக மாறியது. இவரது கடிதங்களும் கடித இலக்கியமும் தமிழாய்ந்தோர் போற்றும் விதமாக அமைந்தது. பிறர் தம்மைப் பார்த்துக் கற்கும்படியான பெருவாழ்வு வாழ்ந்தவர் டாக்டர் மு.வ. அவர்கள்.