பேராசிரியர் முனைவர் கஸ்தூரி ராஜா (14.05.1950)
திரு. இராகவன், சுந்தராம்பாள் இணையருக்கு ஐந்தாவது மகளாக 14.05.1950 ஆம் நாளன்று பிறந்தவர். எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., இதழியலில் முதுகலைப் பட்டம், சித்தாந்தத்திலும் பட்டங்கள் பெற்றவர். 1978 முதல் 1987 வரை மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக விளங்கியவர். 1987 முதல் 2008 வரை அண்ணா ஆதர்சு மகளிர் கல்லூரிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். 2009 முதல் 2012 வரை பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு, நூலகத் தேர்வாணையக் குழு, சாகித்திய அகாடமி, குழந்தைக் கவிஞர்கள் தேர்வாணையக் குழு ஆகியனவற்றில் பணியாற்றியுள்ளார். உலகத் திருக்குறள் பேரவை, அறிஞர் பேராவை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலாகப் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகளில் தலைவர், செயலர் உட்பட பல பதவிகளில் பணியாற்றியவர். 1997 முதல் 2020 வரை தமிழ் இலக்கியம் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 12 நூல்கள் திருக்குறள் தொடர்பானவை. இந்தியா மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் வரை ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கட்டுரை படித்தவர். தலைமை ஏற்றவர். 35 தொகுப்பு நூல்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. 12 இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா பாரிஸ் மாநாடுகளில் பொறுப்பேற்றும் கட்டுரைபடித்தும் சிறப்புகள் பெற்றவர். பிரான்சு, ஜெர்மனி, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்த்தொண்டாற்றியவர். 70க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு அமைப்புகள் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன. தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா விருதினை 2014இல் பெற்றவர். என்னுடன் தமிழ் முதுகலை வகுப்பில் (1974 – 1976) பயின்றவர் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.