பேராசிரியர் முனைவர் ஆ. மணி (15.05.1976)
திருமதி ஆ. தேவகி திரு கா. ஆறுமுகம் இணையரின் தலைமகனாக 13.05.1976 அன்று பிறந்தவர். தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்.
கெங்குவார்பட்டி கெ. கல்லுப்பட்டி, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்றவர். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளநிலை விலங்கியல், மதுரை யாதவர் கல்லூரியில் முதுநிலை தமிழ் இலக்கியமும் முனைவர் பட்டமும் பெற்றவர்.
45 நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். 190 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பழந்தமிழ் இலக்கண இலக்கிய உரைகளில் குறுந்தொகை, தொல்காப்பியம் மேற்கோள்கள் தொகுப்பும் பகுப்பும் என்ற பொருண்மையில் ஆய்வு திட்ட பணி முடித்து ஆய்வேடு பணித்துள்ளார்.
தேசிய அளவில் நான்கு கருத்தரங்கு, பயிலரங்குகளை இந்திய அரசின் நிதி நல்கையுடன் நடத்தியுள்ளார்.
உலகப் பேரறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்களால், ‘இனி நிகழும் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஆய்வினைச் செய்தவர்’ என்று பாராட்டப் பெற்றவர். 2010-2011 ஆம் ஆண்டுக்கான இளம் தமிழறிஞர் விருது, இளம் தமிழ் ஆய்வாளர் விருது, தொல்காப்பியர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றார். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பழந்தமிழ் நூல்களில் பயிற்சியும் பதிப்புத் திறனும் மிக்கவர். திருக்குறள் தொடர்பான இவரது ஆய்வுப் பதிப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கன.