பேராசிரியர் தி. இராசகோபாலன் 12-02-1941
திருவாரூர் தியாகராசர் கோயிலுக்குப் பக்கத்துத்தெருவில் வாழ்ந்த திரு. தியாகராசன், திருமதி வேம்பு அம்மாள் இணையருக்கு 12-02-1941 அன்று பிறந்தவர். சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக, துறைத்தலைவராக 35 ஆண்டுகள் சிறக்கப் பணியாற்றியவர். இவர் சென்னை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியபோது சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகச் சிறப்பாக செயல்பட்டவர்.
இவர் மிகச் சிறந்தபேச்சாளரும், எழுத்தாளரும், தாம்பரம் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகருமாவார். பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்கள் சொற்பொழிவாற்றாத இலக்கிய மன்றங்களோ, கழகங்களோ தமிழ்நாட்டில் இல்லை எனலாம். இவரது தமிழ்த் தமிழ்தொண்டினைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால், இவர் இல்லத்தில் தூங்கி நாட்களைவிட இரயில் பெட்டியில் தூங்கிய நாட்களே அதிகம். அந்த அளவிற்குத் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து ஓயாது இலக்கியத் தொண்டாற்றியவர். இடையறாது இயங்கியவர். இன்றும் இயங்கிக் கொண்டிருப்பவர். தினமணியில் தலையங்கக் கட்டுரைகளைத் திங்களுக்கு இருமுறையாவது எழுதிவருபவர். தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை அறிமுகப்படுத்தி அழகுபார்த்தவர்களில் இவரும் ஒருவர்.
பேராசிரியருடைய வாழ்க்கைத் துணைவியார் திருமதி சாந்தா இராசகோபாலன் அவர்கள் விருந்தோம்புவதில் சிறந்தவர். இவர்களுக்கு மூத்தான மூன்று புதல்வர்கள். 1.வேந்தர் வேந்தன், 2.குறிஞ்சி வேந்தன், 3.மணிவண்ணன். இவரது இரண்டாவது மகன் பேராசிரியர் டாக்டர் குறிஞ்சி வேந்தன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் துறையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
சிறகு முளைத்த சிந்தனைகள், பற்றிஎரியும் பனிக்கட்டிகள்,நெருஞ்சிமுள், முடங்களில் பூத்த மலர்கள், மணியோசை என 16க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 100க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்தவர். இலக்கியப் பேரொளி, முத்தமிழ் வித்தகர் முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.
38 ஆண்டுகளாகத் தொடரும் பேராசிரியருடான நட்பு அடிக்கரும்புபோல இனிக்கும் தன்மையது. பேராசிரியரின் அறுபதாம் ஆண்டு (1998) மணிவிழாவின் நினைவாக ‘மகரந்தச் சேர்க்கை’ எனும் நூலினைப் பாம்குரோவ் உணவு விடுதியில் வெளியிட்டு மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.