பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் (23.05.1944)
சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 25க்கும் மேற்பட்ட நூல்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். பெண்ணியம் தொடர்பாகப் பல நூல்களை எழுதி பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்து வருபவர். அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர். மேலும் இவர் ‘ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை‘ உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உலகில் பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். சங்கக்காலத்தில் 57 பெண்கள் புலமையில் சிறந்து நாடுபோற்ற வாழ்ந்துள்ளனர். அவ்வழிவழி மரபில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் புலமையாளராகத் திகழ்பவர் முனைவர் தாயம்மாள் அறவாணன்.
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்மன்றம் வழங்கும் நூல்கள், கட்டுரைகளுக்கான பரிசினைப் பெற்றவர். 2016ஆம் ஆண்டில் ‘அவ்வையார் படைப்புக் களஞ்சியம்’ என்ற நூலுக்கு சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசைத் தினத்தந்தி செய்தித்தாள் நிறுவனம் வழங்கிச் சிறப்பித்தது.
என் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய பேராசிரியர் பேராசிரியர் டாக்டர் க.ப. அறவாணன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பேராசிரியர் திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்கள் விருந்தோம்புவதில் சிறந்தவர். 78 வயதைக் கடந்த நிலையிலும் எங்க பேராசிரியர் க.ப. அறவாணரைப் போல தொடர்ந்தும் தொய்வில்லாமலும் இயங்கிக்கொண்டே இருப்பவர்.