Skip to content

பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ்

பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ் (5.2.1948)

பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், நெல்லியாங்குளம் என்ற ஊரில் திரு. கனகசாந்தி நைனார்திருமதி. சுனந்தா இணையருக்கு 5.2.1948இல் மகனாகப் பிறந்தவர்.

மாநிலக் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறையிலும் M.Sc., M.Phil., Ph.D., பட்டங்களைப் பெற்றவர். 36 ஆண்டுகள் அரசுக் கலைக்கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தமிழ்நாடு பாடநூல்கழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்புக்குழுத் தலைவராகவும், சென்னைப்பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். சமூகப் பணிகளிலும், சமண சமய முன்னெடுப்புகளிலும் முன்னின்று உழைப்பவர். சமண சமய திங்களிதழான முக்குடை இதழின் ஆசிரியராகச் சிறக்கப் பணிபுரிந்து வருகிறார்.

ஜைனம் ஓர் அறிமுகம், திருப்பருத்திக்குன்றம் சமண ஆலயங்கள், தமிழைச் செம்மொழியாய் வளர்த்த திராவிட திகம்பர சமண முனிவர்களும் அவர்கள் வழங்கிய அருள் நெறியும், வழிகாட்டி நூல் (ஆங்கிலத்தில்வழிபாட்டில் உள்ள சமண ஆலயங்கள்) ஆகிய நூல்களையும் மவுனியே மன்னித்தருள்க, யார் சாட்சி, நாகபவனம் என மூன்று நாடகங்களையும் கற்பக மலர் என்ற புதினத்தையும் சிறுகதைகளையும் எழுதியவர்.

மணிப்பிரவாளத்திலிருந்த ஸ்ரீபுராணம் காவியத்தை எளிய தமிழில் மொழியாக்கம் செய்தவர். 24 தீர்த்தங்கரர்கள் உட்பட சலாக புருஷர்கள் பற்றிய விரிவான வரலாறுகளை முக்குடை இதழில் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியவர்.

ஜைன இளைஞர் மன்றத்தின் மூலமாகச் சிறந்த நூல்கள் பல வெளிவருவதற்குத் துணை நின்றவர்; நிற்பவர்.

சமண பாரம்பரிய சின்னங்கள், குன்றுகள், கல்வெட்டுகள், பாறைச் சிற்பங்கள், சமய நிகழ்ச்சிகள், அறிஞர் நேர்காணல்கள், சமண சமயம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் வலைதளத்தில் காணொளியாக (YouTubeஇல்) பதிவு செய்து வருகிறார். இதுவரை 25க்கும் அதிகமான காணொளிப் பதிவுகளைச் செய்துள்ளார்.

1990ஆம் ஆண்டில் பேராசிரியர் கனக. அஜிததாஸ் அவர்களையும் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறைப் பேராசிரியர் . ஏகாம்பரம் அவர்களையும் எங்கள் ஊர் தியாக துருகத்திற்கு அழைத்துச் சென்றேன். எங்கள் ஊர் மலையையும் மலையில் இருக்கும் மலையம்மனையும் இருவரும் இருநாள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். மலையம்மன் கோயில் சமணர் படுக்கை என்றும் மலையம்மன் சமண சமயப் பெண் தெய்வம் தருமதேவி என்றும் அருகிலிருக்கும் முனீஸ்வரன் சிலை வர்த்தமான மகாவீரர் என்றும் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதினர்.

பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ் அவர்கள் அமைதியாகப் பணிபுரியும் அறிஞர் என்றால் மிகையாகாது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995