பேராசிரியர் சி. இலக்குவனார் (17.11.1909 – 03.09.1973)
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வாய்மை மேடு ஊரினர். சிங்காரவேலர் இரத்தினம் அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். லட்சுமணன் என்ற இயற்பெயரைத் தமிழ் ஆசிரியர் சாமி. சிதம்பரனார் இலக்குவன் என மாற்றினார். தனித்தமிழ் மற்றும் சீர்திருத்த நெறியும் கொண்டவர்.
இவரது முற்போக்குச் சீர்திருத்தக் கொள்கையால் தொடர்ந்து ஒரு கல்லூரியில் பணியாற்ற முடியாமல் பல இடங்களுக்கு மாறுதல் பெற்றார். இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். அதனால் 01.05.1965 இல் சிறை சென்றார்.
1967இல் ஆட்சி மாறியதால் மீண்டும் பணியில் அமர்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைப் பேராசிரியரானார். ஆந்திர மாநிலம் உசுமானிய பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் நாகர்கோவில் இந்துக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழை உயர்த்தினார். மதுரைத் திருநகரில் 15.01.1964இல் குறள் நெறி இதழைத் தொடங்கி நடத்தினார்.
தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் தம் இரு கண்களாகவே போற்றி வாழ்ந்தவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆராய்ச்சி உரையுடன் வெளியிட்டார். எம்.ஏ., எம்.ஃபில்., பட்டத்தோடு முனைவர் பட்டமும் பெற்றார். செந்தமிழ் மாமணி, பயிற்சி மொழிக் காவலர், இலக்கணக் காவலர் போன்ற விருதுகளைப் பெற்றவர்.
மாணவர் ஆற்றுப்படை, எல்லோரும் இந்நாட்டு மன்னர், தமிழ் கற்பிக்கும் முறை, வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கர்மவீரர் காமராசர், என் வாழ்க்கைப் போர் என 25 நூல்களை எழுதினார். இவரின் மக்கள் பதின்மர். அவருள் முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவன் (மாநிலக் கல்லூரி), பேராசிரியை மதியழகி (திண்டுக்கல் அரசினர் மகளிர் கல்லூரி), திருவள்ளுவர் மறைமலை ஆகியோர் சிறப்பாகத் தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர் போற்றும் மறவராக, செந்தமிழ் அறிஞராக, தமிழுக்குத் தொண்டு செய்த போராளியாக வாழ்ந்தவர் பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் அவர்கள்.