Skip to content

பேராசிரியர் க. ப. அறவாணன்

பேராசிரியர் . . அறவாணன் (09.08.1941 – 23.12.2018)

சென்னை, அரும்பாக்கம், அய்யாவு நாயுடு காலனியில் வாழ்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டம், கடலங்குடியில் பிறந்தவர். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளர் மற்றும் பொருளாளர். இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் ஆவார்.

சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். “நன்னூலும் அதன் உரைகளும்என்னும் ஆய்வுக்கட்டுரை அளித்து எம்.லிட். பட்டம் பெற்றவர். தொல்காப்பிய அகத்திணை, புறத்திணை தொடர்பாக ஆய்வு செய்து முனைவர்பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடே பின்னாளில் அற்றை நாள் காதலும் வீரமும் எனும் நூலாக வெளிவந்தது.

இவர் பணியாற்றிய இடங்கள், தமிழ் விரிவுரையாளர், தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை, முதல்வர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம், தமிழ்த் துணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை, ஆய்வுப்பேராசிரியர், செனகல் பல்கலைக்கழகம், செனகல், தமிழ்ப்பேராசிரியர் & துறைத்தலைவர், லயோலா கல்லூரி, சென்னை, தமிழ்ப்பேராசிரியர் & தமிழியற்புலத்தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், காலாப்பட்டு, புதுச்சேரி, துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி ஆகியன ஆகும்.

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவை,

அற்றையநாள் காதலும் வீரமும், கவிதை கிழக்கும் மேற்கும், காலப்போக்கும் கல்லூரிப்போக்கும், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பிய ஒப்பியல், தொல்காப்பியக் களஞ்சியம், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, புரட்சிப்பொறிகள் ஆகியன ஆகும்.

பேராசிரியர் . . அறவாணன் அவர்கள் அவிநயம்:மூலமும் உரையும் எனும்  நூலைப் பதிப்பித்திருக்கிறார். இவர் ஆசிரியராக இருந்து அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு முதலான இதழ்களை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆண்டுதோறும் ஆய்வுக்கருத்தரங்குகளை நடத்தி அறவாணர் விருது வழங்கிச் சான்றோரைப் பாராட்டிப் போற்றியவர். தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார். 1986இல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருதையும் பெற்ற சிறப்புக்குரியவர்.

1971முதல் அவரின் இறுதிக்காலம் (2018)வரை பேராசிரியருடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பினைப் பெற்றவன். 1971 – 1976 பச்சையப்பனில் எனக்கு ஆசிரியராக அமைந்தவர். என் பேச்சிலும் எழுத்திலும் அவரது ஆளுமை உண்டு.

நேர்கோட்டு வாழ்க்கையர். தமிழ் உணர்வாளர். தனித்தமிழ்ப் பற்றாளர். சமுதாய, மானுடவியல், வரலாற்று ஆய்வாளர். தமிழ் இளங்கலை மாணவராகப் பச்சையப்பனில் படித்தபோது அவர் வெளியிட்ட, புரட்சிப்பொறிகள் எனும் நூல் என்னுள் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. எழுதுவதிலும் பாடம் நடத்துவதிலும், நறுக்குத்தெரித்தாற்போல் பேசுவதிலும் அவருக்குநிகர் அவரே. அவரின் வைர வரிகளோடு என் அறிமுக உரையை நிறைவு செய்கிறேன்.

தமிழர்

எண்ணியது கோடி

பேசியது இலட்சம்

எழுதியது ஆயிரம்

அச்சிட்டது நூறு

பின்பற்றியது பூஜ்யம்.

(அறஇலக்கியக் களஞ்சியத்தின் முன் அட்டையில் இடம்பெற்றிருக்கிறது)

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995