பேராசிரியர் க.ச. அருள்நந்தி சிவம் (1912)
பேராசிரியர் அருள்நந்தி சிவம் 1912ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் பணியாற்றி படிப்படியாக உயர்ந்து பேராசிரியர் எனச் சிறந்தவர். தத்துவம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் புலமை பெற்றவர். இலண்டனில் சிறிதுகாலம் பணிபுரிந்ததாக அறியப்படுகிறது.
இவர் தமிழ்நாட்டு அறிஞர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இவருடைய திருக்குறள் தொடர்பான கட்டுரை வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் அவர்கள் தொகுத்த திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மடம் வெளியீடு நூலில் திருக்குறளில் உளவியல் எனும் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் ஆகியவர்களோடு நெருக்கமாக தொடர்பில் இருந்திருக்கிறார் என அறியமுடிகிறது. இவரது இறுதி காலத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து மறைந்தார் எனத் தெரிகிறது.
பேராசிரியர் அ.ச. அருள்நந்தி சிவம் அவர்களின் மகள் சித்ரா இலங்கை கொழும்பில் வாழ்வதாக அறியமுடிகிறது. இலங்கைத் தமிழறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை மாணவர். சிறுவர் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். கல்வித் துறையில் பணியாற்றியவர்.
பேராசிரியர் க.ச. அருள்நந்தி சிவம், கனக. செந்தில்நாதன், கிருஷ்ணப்பிள்ளை, கா.போ. ரத்தினம், க. வேந்தனார் ஆகியோர் அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
இவரின் பிறப்பு, இறப்பு குறித்த தகவல்கள் சரியாகக் கிடைக்கவில்லை. இவர் குறித்து அறியப்படும். செய்திகள் வருமாறு:
இலங்கை, வட இலங்கை சங்கீத சபையின் தலைமைப் பொறுப்பினை வகித்தவர் க.ச. அருள்நந்தி. இந்த சபைக்குப் பாடத்திட்டம் வகுத்துக் கொடுக்க வழிகாட்டியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.பி. சபேசையர். பண்டிதமணி கணபதிப் பிள்ளையின் மரபில் வந்தவர் க.ச. அருள்நந்தி. இலங்கையில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். அருள்நந்தி கொழும்புத் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கின்றார். அதன் நான்காம் ஆண்டுவிழாவில் தலைமையுரை ஆற்றி இருக்கின்றார் அவ்வுரை, 1992இல் வந்த ஐம்பது ஆண்டுச் சிறப்பு வெளியீட்டில் உள்ளது. மேலும், அதில் அவர் 1944,1959 ஆகிய ஆண்டுகளில் அச்சங்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய செய்தி இடம்பெற்றுள்ளது.
அருள்நந்தி செய்முறைப் பெளதிகவியல் நூல் என்னும் நூலை மொழிபெயர்த்துள்ளார். ஏறத்தாழ, 850 பக்கங்களைக் கொண்ட அந்நூல் 1963இல் இலங்கை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளது. நட்டுவச் சுப்பையனார் எழுதிய கனகி புராணம் என்னும் நூல் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கத்தால் 1961இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முகப்புப் பக்கத்தில் *இலங்கைக்கு வித்தியாதிகாரியாயிருந்து இளைப்பாறிய (ஓய்வுபெற்ற) திரு, க. அருள்நந்தி அவர்களின் முன்னுரையுடனும், புலவர், சிவங். கருணாலய பாண்டியனார் அவர்களின் விரிவுரையுடனும் கூடியது என்னும் குறிப்பு உள்ளது. அதன் மூலம் இவர் 1961இல் இறந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.
கனகி புராணத்திற்கு திரு. க.ச. அருள்நந்தி அவர்கள் அளித்த முன்னுரையின் நிறைவுப் பகுதி,
‘கனகி புராணம் செய்யுட்கள் வேறெவையேனும் யாருக்கும் எட்டுமாயின் அவர்கள் அவற்றைக் கலத் தீ கொண்டொழிக்கு முன்னர் இப்பதிப்பின் கருத்தாவன இராமலிங்கம் அவர்களுக்குக் குறித்தனுப்பி வைத்தால், அவை சிதைந்து போகாமல் நின்று நிலவும் வழியை அவர்கள் தேடி வைப்பார்கள். யாவும் வல்ல இறைவனருளால் அவர்களுக்கு எல்லா நலன்களுமுண்டாகுக’ (க.ச. அருள் நந்தி)