Skip to content

பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்

பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் (25.12.1942)

பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன் அவர்கள் இலங்கையில் உள்ள முல்லை மாவட்டத்தில் முள்ளியவளையில் திருமதி நா. நீலாம்பாள் திருமிகு நாகராஜ ஐயர் தம்பதியருக்கு மகனாக 25. 12. 1942 அன்று பிறந்தார்.

தொடக்கக் கல்வியை முள்ளிவளை கலைமகள் வித்தியாலயம் பள்ளியிலும் கல்லூரிக் கல்வியை வித்தியானந்தக் கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனையிலும் முடித்தவர். தமிழ் இளங்கலை, தமிழ் முதுகலை முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், தமிழ்ப் பேராசிரியர், துறைத்தலைவர் எனப் படிப்படியாக உயர்ந்தவர்.

தமிழ் பக்தி மரபிலும் இக்கால நவீனத்துவ இலக்கிய இயக்க மரபிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். கற்றுத் துறைபோகியவர்.

தற்போது கனடா நாட்டில் முழுமையாகக் குடியுரிமை பெற்று தங்கிவிட்டார். கனடா தமிழ் கல்லூரியில் உயர் கல்விப் பிரிவுத் தலைவராக 2011 முதல் டொரண்டோவில் பணிபுரிகிறார்.

பதினைந்து நாள் பயணமாக நான் கனடா சென்றிருந்தபோது என்னுடன் இருந்து விருந்து தந்து போற்றியவர். என்மேல் மிக்க அன்புடையவர். பேராசிரியர் கலாநிதி அவர்களும் அவரது துணைவியார் திருமதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களும் இருதலைப் புள்ளின் ஓருயிர் ஈருடல் எனலாம்.

இணையரால் இன்பத் தமிழ் வளர்ந்தது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டும் தமிழ் ஆய்வு செய்துவருகிறார்கள். இப்படி ஒரு தமிழிணையைக் காண்பது அரிது.

இலங்கை முல்லை மாவட்டம் முள்ளியவளைக் கிராமத்தைச் சேர்ந்தவரான கலாதிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் ஈழத்தின் கந்தபுராண கலாசாரத்தின் வழிவந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இலக்கியத்திறனாய்வு, ‘சமயதத்துவஆய்வு என்பன இவர் ஈடுபாடு கொண்டுள்ள துறைகள். இவர் தம் துணைவியார் கௌசல்யாவுடன் இணைந்து எழுதிய இந்தியச்சிந்தனைமரபு (1993,1996) என்ற ஆய்வு நூல் தமிழக அரசு பரிசும், இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதும் பெற்ற ஒன்றாகும். மேலும் புராணபோதகர் விருது, இலக்கியத்தோட்ட விருது, இலக்கியப் பேரறிஞர் விருது, வித்யாபூஷணம் விருது முதலான விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஈழத்துத்தமிழ் நாவலிலக்கியம் (1978). தமிழ் ஆய்வியலில் கலாநிதி. சு. கைலாசபதி (1998) நால்வர் வாழ்வும்வாக்கும் (2002) என்பன இவரது ஏனைய நூல்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆய்வியல் கண்ணோட்டத்தோடு விளக்குவது நால்வர் வாழ்வும் வாக்கும் எனும் நூல்.

கந்தபுராணம்ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் (2002) என்ற இந்நூல் கச்சியப்ப சிவாசாரியாரின் கந்தபுராணம் என்ற பேரிலக்கியம் பற்றிய திறனாய்வு நிலையிலான ஒரு அறிமுகம் ஆகும். புராண நன்னாயகம் எனவும் சைவசித்தாந்த உருவகம் எனவும் போற்றப்படும் அப்பேரிலக்கியத்தின் ஊடாகப் புலப்படும் வாழ்வியல் சார்ந்த கூறுகளுக்கு அழுத்தம் தந்து எழுதப்பட்ட ஆக்கம் இது.

நால்வர் வாழ்வும்வாக்கும், கந்தபுராணம்ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் ஆகிய இரு நூல்களையும் சென்னை, கே.கே. நகர், சக்தி விநாயகர் கோயிலில் சொற்பொழிவாகப் பேசவைத்து நூலாக்கம் செய்வதற்குத் துணைநின்றவர்கள் இருவர். ஒருவர் பேராசிரியர் டாக்டர் அரங்க. இராமலிங்கம், மற்றொருவர் கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் அவர்கள்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995