பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை (02.03.1896 – 25.04.1961)
தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 02-03-1896 அன்று பிறவிப்பெருமான்பிள்ளை – சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். கார்காத்த வேளாளர் குலத்தில் சேதுப் பிள்ளை பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்குச் சேது என்று பெயர் சூட்டினர். இரா.பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த ‘இரா‘ என்பது இராசவல்லிபுரத்தையும் ‘பி‘ என்பது ‘பிறவிப்பெருமான்பிள்ளை‘ அவர்களையும் குறிப்பன.
ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர்மீடியட்) இரண்டாண்டுகளைத் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்குத் தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.
தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேதுப்பிள்ளை, நெல்லையப்பப் பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை மணந்தார்.
இவர் ஒரு சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனலாம்.
கம்பராமாயணச் செம்பதிப்பு வெளிவருவதற்கு முழுமுதற் (1955-1961) காரணமாக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 25 ஆண்டுகள் (1936-1961) பணியாற்றித் தமிழ்த்தொண்டுபுரிந்த பெருமகனார். தமிழ்நாட்டில் முதல் தமிழ்ப் பேராசிரியர் (Professor) என்ற பதவியை அலங்கரித்தவர் இவர். இவருடைய தாயார் திருமதி சொர்ணம்மாள் பெயரியல்சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகளை நிறுவிய செந்தமிழ் உணர்வாளர்.
இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் “திருவள்ளுவர் நூல் நயம்” என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, “தமிழகம் ஊரும் பேரும்” என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது.
சிலப்பதிகார நூல்நயம், தமிழின்பம், தமிழ்நாட்டு நவமணிகள், தமிழ் வீரம், தமிழ் விருந்து, வேலும் வில்லும், வேலின் வெற்றி, வழிவழி வள்ளுவர், ஆற்றங்கரையினிலே, தமிழ்க் கவிதைக் களஞ்சியம், செஞ்சொற் கவிக்கோவை, பாரதியார் இன்கவித்திரட்டு முதலான நூல்களையும் படைத்துள்ளார்.
பேராசிரியர் சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்திய அகாதெமியின் பரிசு 1955-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ‘டாக்டர்‘ (D.lit.,) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி “வெள்ளிவிழா” எடுத்தும், “இலக்கியப் பேரறிஞர்” என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. பேராசிரியர் சேதுப்பிள்ளை 25-04-1961 அன்று தம் 65ஆம் வயதில் இயற்கை எய்தினார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.