Skip to content

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்

பேராசிரியர் ..ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002)

பேராசிரியர் ..ஞானசம்பந்தன் அவர்கள் திருச்சி மாவட்டம் கல்லணையை அடுத்துள்ள அரசங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். பெருஞ்சொல் விளக்கனார் .மு.சரவண முதலியாருக்கு மகனாகப் பிறந்தவர். முதுகலைத் தமிழில் பல்கலைக்கழக முதன்மை பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக, சென்னை வானொலி நிலைய நாடகப்படைப்பாளராக, சென்னை அரசாங்க மொழிபெயர்ப்புத்துறைத் துணை இயக்குநராக, தமிழக அரசின் வெளியீட்டுத் துறைச் செயலராக, தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநராக, மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் தத்துவமையத்தில் பெரியபுராண ஆய்வினை மேற்கொண்டு பெரியபுராணம் ஓர் ஆய்வு எனும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார்.

தமிழ்ப் பேராசிரியர்களில் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளராக விளங்கியவர். கம்பனிலும் பெரியபுராணத்திலும் ஆழங்கால்பட்டவர். இலங்கைக்கு 25 முறைகளுக்கும் மேலாகச் சென்று சொற்பொழிவாற்றிய ஒரே தமிழறிஞர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த யோகர் சாமிகளை நேரில் கண்டு அவரது ஆசிகளையும் அன்பையும் பெற்றவர். பேராசிரியர் ..ஞா. அவர்களிடம் யோகர் சாமிகளைப் பற்றிப் பல நிகழ்வுகளைக் கேட்டறிந்தேன். அதன் பலனாகவே நான்கு முறை யாழ்ப்பாணத்திற்குச் சென்று யோகர் சாமிகளின் சமாதியில் வழிபடும் பேற்றினைப் பெற்றேன். வாரந்தோறும் சென்னை கே.கே.நகர் விநாயகர் கோயிலில் சொற்பொழிவாற்றச் செல்லும் போதெல்லாம் அவரைக் கண்டு அவரின் கருத்துக்களைச் செவிமடுக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன். மலேசியா, பர்மா, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குச் சென்று சைவத்தையும் தமிழையும் வளர்த்த பேரறிஞர். தமிழ்த் தென்றல் திரு.வி.. அவர்களின் அன்பைப் பெற்றவர். பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் அன்பிற்குரிய நெருங்கிய சீடர்.

திருக்குறள் கண்ட வாழ்வு, பன்முக நோக்கில் இராமன், இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், இலக்கியக்கலை, திருவாசகம் சில சிந்தனைகள் ஐந்து தொகுதிகள், சேக்கிழார் தந்த செல்வம், தத்துவமும் பக்தியும், கம்பன் கலை, கம்பன் நோக்கில் நாடும் மன்னனும், கம்பன் புதிய பார்வை, குறள் கண்ட வாழ்வு என்பன போன்ற 40 நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய கம்பன் புதிய பார்வை என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்காக 1985இல் சாகித்திய அகாதமி விருது இவருக்குக் கிடைத்தது.

தமிழ்த் தென்றல் திரு.வி.. அவர்களைப் போலவே இவருக்கும் முதுமைக் காலத்தில் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அந்நிலையிலும் சேக்கிழார் ஆய்வு மையத்தைச் செயலாளராக இருந்து திறம்பட நடத்தினார். அக்காலக் கட்டத்தில் அவர் வாய்மொழியாக உரைத்த கருத்துக்களே பதிவு செய்யப்பட்டுத் திருவாசகம் சில சிந்தனைகள் எனும் பெயரில் ஐந்து தொகுதிகளாக வெளிவந்தது. இளையர் என்று பாராமல் என்போன்ற இளைஞர்களிடம் அன்பு பாராட்டி அரவணைத்துச் செல்லும் பண்பினர். எந்த நேரத்தில் எந்த சந்தேகத்தைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டாலும் உடனே பொறுமையாகப் பதிலுரைக்கும் பண்பினர்.

17-11-2000 வெள்ளிக்கிழமை அன்று மறக்கமுடியாத நாள் எனக்கு. எனக்கு உபதேசம் நடந்த நாள். அருளாளர்களின் அனுபவத்தை அடையாளம் காட்டிய நாள். பேராசிரியர் ..ஞா. மேடைகளில் பேசுவது இல்லை என முடிவெடுத்து மேடைகளில் பேசாமல் பார்வையாளராக மட்டுமே கலந்துகொண்டிருந்த நாட்கள் அவை.

இரண்டாண்டுகளுக்கு மேலாகவே மேடைகளில் பேசாமல் இருந்தார். கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயிலில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தேன். அவரும் அழைப்பினை ஏற்றுப் பார்வையாளராக அமர்ந்து சொற்பொழிவினைக் கேட்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் நானும் அத்திருக்கோயிலின் அப்போதைய  செயல் அலுவலர் கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் அவர்களும் பேராசிரியர் .. ஞா. அவர்களை அழைத்துக்கொண்டு அவரது இல்லத்திற்குச் சென்றோம். ஆட்டோவில் இருந்து இறங்கியவர் வீட்டின் வெளிப்புறக் கதவை (கேட்) வேகமாகத் திறந்தார். மூன்றடி தள்ளி இருந்த இரும்புக் கதவுகளை (கிரில்) வேகமாகத் தட்டிவிட்டார். இரு காலனிகளும் இருவேறு திசையை நோக்கிப் பறந்தன. என்னைப் பார்த்து

‘…என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கஅருளாளர்களை இப்படியா ஆய்வு செய்வதுஅவன்தான் அப்படிப் பேசறான் என்றால், நீயுமா அதை வழிமொழிவதுநீ சொன்னால் உலகம் நம்புமேடேய் உன்னை மொதல்ல திருத்துறன்டாஅதே எடத்துல எனக்கும் மேடையைப் போடுடாவாயைத் திறக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்த இந்த ..ஞா. உன்னைத் திருத்த வாயைத் திறக்கறன்டாஎனக் கோபத்தோடு பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

நானும் தென்னம்பட்டு ஏகாம்பரமும் செய்வதறியாது இல்லம் வந்தடைந்தோம். அடுத்தநாள் அவரிடம் சென்று மன்னிப்புக்கேட்டு அவர் குறிப்பிட்டபடி 17-11-2000 வெள்ளிக்கிழமை அன்று அவரது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தோம். அருளாளர்கள் என்ற தலைப்பில் பேசினார். ஒன்றரை மணிநேரம் அருள்மழைப் பொழிந்தார். அமைச்சர் ஆர்.எம்.வீ., அரசு செயலாளர் திரு. . பிச்சாண்டி ஐஏஎஸ் உட்பட மிகப் பலர் திறலாக வந்திருந்தனர். ..ஞா. பேசுகிறாரா எனக் கேட்டு வியப்போடு பெருங்கூட்டம் கூடிவிட்டது.

அன்று எனக்கு உபதேசம் நடந்தது. உபதேசம் என்றால் தனிமையில் காதோடு காதாக, குரு சீடன் இருவரும் பட்டு வேட்டியால் தங்களை மூடிக்கொண்டு, மொண மொண என்று சீடன் காதில் குரு இரகசியமாகச் சில மந்திரங்களைக் கூறுவார். இப்படித்தான் உபதேசம்என்பது இரகசியமாக உலகில் நடைபெற்று வருகிறது. ஆனால், அன்று என்னைக் குறிவைத்து, என் ஒருவனுக்காகவே அருள்மாரி பொழிந்தது. எனக்கு நடந்தது இருநூறு பேருக்கு நடுவில். வெளிப்படையாக (Open). பேராசிரியர் .. ஞா. அவர்கள் அருள்மழைப் பொழிந்துகொண்டே இருந்தார். நான் உள்வாங்கிக்கொண்டே இருந்தேன். அன்று அவர் குருவானார். நான் சீடனானேன். சொல்லுக்குள்ளே சூட்சமத்தைப் போதித்தார் அன்று. நினைந்து நினைந்து உருகுகிறேன் இன்று. இதற்குமேல் என்ன சொல்லஎல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995