பேரறிஞர் அண்ணா (15.09.1909 – 03.02.1969)
அறிஞர் அண்ணா – தமிழர் நெஞ்சங்களில் நின்று நிலைபெற்ற பெயர். காஞ்சிபுரத்தில் சாதாரண நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைத் தொடர முடியவில்லை. தந்தை பெரியாரால் ஈர்க்கப் பெற்றுச் சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.
தந்தை பெரியாரின் பேரன்பிற்கும் பெருநம்பிக்கைக்கும் உரியவராகி நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றில் இணைந்து தொண்டாற்றியவர். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு உலகம் வியக்கத்தக்க அளவில் தமிழக அரசியலில் உயர்ந்து ஆட்சிக்கட்டில் ஏறியவர். தமிழ்நாட்டு முதலமைச்சராக (1967-1969) இரண்டு ஆண்டுகளே இருந்து 60 வயதை அடைவதற்கு முன்பே மரணத்தைத் தழுவியவர்.
“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து” – 780
எனும் திருக்குறளுக்கு விளக்கமாய்த் தமிழகமே கண்ணீர்க் கடலில் மூழ்க இயற்கை எய்திய அறிஞர்.
அண்ணா – அரசியலில் ஒரு சாணக்கியர். எளியவர். ஆனால் ஏமாறாதவர். பண்பட்டவர். ஆனால் எதிரியின் பலம் அறிந்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அனைவரையும் அரவணைத்துச் சென்றவர்.
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது – 647
எனும் திருக்குறளுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர். எதிர்ப்பாளர்கள் அனைவரையும் பண்பால், தமது ஆளுமையால் வெற்றி கொண்டவர். மிகப்பெரிய ஆளுமை உடையவராகத் தம் வாழ்நாளில் திகழ்ந்தவர். தான் வகித்துவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியனுக்கு அளித்தத் தன்னம்பிக்கையாளர் (Confidence). பொதுச் செயலாளர் பதவியை அடைவதற்கு இரு தலைவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது பொதுச்செயலாளர் பதவியை நானே ஏற்கிறேன் எனக் கூறிப் பொறுப்பினை ஏற்றுக் கட்சியைக் கட்டிக்காத்து வழிநடத்திய நெஞ்சுரத்தினர். அரசியல் சதுரங்கத்தில் கணக்காகக் காய்களை நகர்த்திய சமர்த்தர். சாதுர்யம் மிக்கவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தந்தை பெரியாரை நேரில் கண்டு தமிழக ஆட்சியையே பெரியாரின் காலடியில் அர்ப்பணித்த அருந்தமிழ்ப் பண்பாளர். நன்றி மறவாத நற்குணத்தவர். அளப்பரிய ஆற்றலாளர்.
அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி ஆயிரமாயிரம் நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லலாம். தமிழக அரசியலில் இவரைப் போல் இன்னொருவர் உண்டா? என வியக்கும் அளவுக்கு விண்ணில் உயர்ந்து நிற்பவர். இருமொழிப் புலமையாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பேசவும் எழுதவும் வல்லவர். அன்னைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அடுக்குமொழியில் அழகொழுகப் பேசும் ஆற்றலாளர். சுருக்கமாகச் சொல்வதென்றால் தமிழர் அனைவரையும் அன்பால் அறிவால் பண்பால் கட்டிப்போட்ட ஒரு மந்திரச் சொல்தான் அண்ணா.
அண்ணாவின் மிகப்பெரிய குறுகிய கால வெற்றிக்கு மூன்று காரணங்கள். ஒன்று அவரது அறிவு, ஆற்றல், திறமை, தன்னம்பிக்கை. இரண்டு அவரைச் சுற்றி ஆற்றல்மிக்க (எழுத்தாற்றல், பேச்சாற்றல்) தம்பிகளைத் தளபதிகளாகக் கொண்டிருந்தவர். மூன்று அவரது கொள்கைகளைப் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் திரைப்படத்துறை அவர் வசத்தில் இருந்தது.
அரசியலில் நாவலர் இரா. நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி, மதியழகன், சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம், நாஞ்சில் கி. மனோகரன், திருமதி சத்தியவாணி முத்து, தத்துவமேதை டி.கே. சீனிவாசன் என மிகப் பலர் களத்தில் தயாராக இலக்கு நோக்கிப் பாயும் ஈட்டிகளாக நின்றனர்.
திரைப்படத்துறையில் நகைச்சுவை மாமன்னர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. இராமசாமி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். இராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி எனக் கலையுலகமே அவர் பின்னால் நின்றது. இப்படி ஆற்றல் மிக்க அரசியல் தளபதிகளாகிய தம்பிகளையும் திரைத்துறையைச் சார்ந்த தம்பிகளையும் தனக்கு உரிமையாகக் கொண்டு படைசூழ அரசியலில் பேரரசராக வலம் வந்தவர் பேரறிஞர் அண்ணா. ஆம் வலம் வந்தார்; வாழ்ந்தார்; வளர்ந்தார்; முடிசூடினார். வாழ்வு முற்றுப் பெறாமலேயே மறைந்தார். இச்சோகம் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட சோகத்தின் சோகம்.
அரசியலிலும் திரைப்படத்துறையிலும் எழுத்திலும் பேச்சிலும் தன்னைப் பின்பற்றி பல்லாயிரம் தம்பிமார்களும் தலைவர்களும் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர், இன்றும் திகழ்பவர் பேரறிஞர் அண்ணா.
அரசியலில் ஆளுமை செலுத்திய அண்ணா தமிழ் மொழி இலக்கியத்திலும் ஆளுமை செலுத்தினார். தமிழில் பேச்சுக் கலையை உயிர்த்தெழுச் செய்தார். எழுத்துக்கலையை வளர்த்தெடுத்தார். தன்னைப் போல பேசவும் எழுதவும் பன்னூறு தம்பிமார்களை உருவாக்கினார். தமிழில் கடிதக் கலையை வளர்த்தெடுத்தவர். தம்பிக்கு இவர் எழுதிய கடிதங்கள் மட்டும் 25 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார்.
குடியரசு, விடுதலை, நம்நாடு, திராவிடநாடு, ஹோம்ரூல் ஆகிய இதழ்களில் இவர் எழுதிக்குவித்த கட்டுரைகள் ஆயிரக்கணக்கானவை. இவர் திரைக்கதை வசனம் எழுதி வெளிவந்த திரைப்படங்கள், நல்லத்தம்பி, வேலைக்காரி, ரங்கோன் ராதா முதலியன குறிப்பிடத்தக்கன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கவிதைகளையும் எழுதியுள்ளார். அண்ணா கவிதைகள் என்றே நூல் வெளிவந்திருக்கிறது.
அருந்தமிழ்ப் பெருநிதியம் அண்ணா எழுதியவை 110 தொகுதிகளாக வர இருக்கின்றன. இன்று அச்சில் வெளிவந்தவை 64 தொகுதிகள். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் மட்டும் 25 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக, நாடகாசிரியராக, நடிகராக, திரைப்பட வசனகர்த்தாவாக, அரசியல் தலைவராக, பண்பாளராக, அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனிதநேயம் மிக்கவராக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. “தமிழ்நாட்டின் பெருந்தமிழ்ப் பெருநிதியம் அறிஞர் அண்ணா”